மத்திய அரசின் 2024-25 நிதி நிலை அறிக்கையின் மீது நாடாளுமன்றத்தில் 27 மணி நேரம் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்திருக்கிறார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது, மோடியின் 3.0 ஆட்சியைத் தாங்கிப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திரபிரதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பீகார் மாநிலம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் போல மற்ற மாநிலங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதையும், இந்த இரு மாநிலங்களின் பெயர்கள் நிதி நிலை அறிக்கையில் பல முறை குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-05 நிதிநிலை அறிக்கையில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அந்த மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படவில்லையா? அந்த மாநிலங்களுக்கானத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டனவா? அப்போது ஆட்சிப்பொறுப்பில் இருந்த இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்கிறேன்” என்று வாதம் செய்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கானப் பதில் என்ற வகையில் இந்த வாதம் சரியானதாக இருக்கும். அதே அளவுக்கு நிர்மலா சீதாராமனின் பதிலில் நியாயமும் தேவைப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததால், மாநிலங்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகர மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதி வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைத்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.1000 கோடி நிதி அளித்தது. அதன் காரணமாக மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவுபெற்று, சென்னைக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு முன்பாக, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலும் தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்குமானத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி ஆட்சியில் சென்னை மெட்ரோல் ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்குரிய நிதி சரியாக ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகக்கூட தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட பல பகுதிகள் கடந்த டிசம்பர் மாதம் கடும் புயல்-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் கோரி வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் நிதி நிலை அறிக்கையில் பதில் இல்லை.
கேரள மாநிலத்தில் ஒக்கிப் புயல் தாக்கியபோதும் மத்திய அரசும் அதன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாரபட்சமான அணுகுமுறையையேக் கையாண்டார்கள். அதே நேரத்தில், பீகார் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியைக் கணிசமான அளவில் இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. இதற்கானத் தெளிவான விளக்கமோ, நியாயமான நிவாரணமோ நிதி அமைச்சரின் பதிலுரையில் இடம்பெறவில்லை.
அதற்கு மாறாக, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளால் நாடாளுமன்ற மரபுகள் பாதிக்கப்படுவதாகவும், பொருளாதாரம்-ராணுவம் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். நாட்டிற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் ராணுவ வீரர்களுக்கும் அவர்களின் தியாகத்தை ஏற்றுக்கொண்டு வாழும் அவர்தம் குடும்பத்திற்கும் போதுமான அளவில் பொருளாதாரப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதைத்தான் எதிர்க்கட்சிகள் கேள்விகளாக முன்வைக்கின்றன.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு இதுவரை இருந்த நெறிமுறைகளைக் கைவிட்டு, அக்னிவீரர்கள் என்ற பெயரில் தற்காலிகப் பணியாக எடுக்கப்படும் வீரர்களுக்குப் போதிய பொருளாதாரப் பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டினால் ராணுவத்துக்கும் வீரர்களுக்குமிடையே மோதலை உண்டாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகவும், வெளிநாடுகளின் பார்வையில் இந்தியாவைப் பலவீனப்படுத்த நினைப்பதாகவும் நிதியமைச்சர் பதிலுரையில் தெரிவித்திருப்பது வீண்வாதமின்றி வேறில்லை.
இந்தியாவின் குடிமக்கள் என்பவர்கள் அவரவர் மாநிலங்களில் வாழ்கின்ற மக்கள்தான். மத்திய அரசுக்கென்று தனியாகக் குடிமக்கள் கிடையாது. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.