
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நள்ளிரவிலேயே வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஒன்றிய பாஜக அரசு. இதில் அதிமுக ஆடிய கபட நாடகமும், கண்ணாமூச்சி ஆட்டமும் குறித்து விமர்சனம் எழுந்திருக்கிறது.
வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது. நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தது அதிமுக.
நேற்று நள்ளிரவில் 2 மணிக்கு மேல் நடந்த வாக்கெடுப்பிலும் பங்கேற்ற அதிமுக எம்.பி. தம்பிதுரை, ’சிறுபான்மை சமூக மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை’ என்று கூறி, வாக்கெடுப்பில் மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தார்.
ஆனால், மாநிலங்களவையில் அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இடையில் அமர்ந்திருந்தது பேசு பொருளானது. அதிலும் மசோதா குறித்த விவாதம் சூடாக நடந்து வந்த வேளையில், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக ஓரிரு தினங்களுக்கு முன்பாக நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து 1 மணி நேரம் பேசியிருந்தார் தம்பிதுரை.
பழனிசாமி, செங்கோட்டையனை அடுத்து தம்பிதுரையும் டெல்லி சென்றதால் அதிமுகவில் என்ன நடக்கிறது? கூட்டணி பேச்சுவார்த்தை என்றால் அது பழனிசாமியிடம் மட்டும்தானே நடத்த வேண்டும். அடுத்தடுத்து ஏன் இப்படி அதிமுக புள்ளிகளை டெல்லிக்கு அழைத்து பரபரப்பை கூட்டுகிறது பாஜக? என்ற கேள்வி எழுந்தது.
ஒரு மணி நேர சந்திப்பில் கூட்டணி குறித்துதான் பேசப்பட்டது என்ற செய்தி பரவி வரும் நிலையில், மாநிலங்களவைக்கு உள்ளேயும் மசோதா விவாதம் போய்க் கொண்டிருந்தபோதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைதான் நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது.
ஒருபக்கம் மசோதாவை எதிர்ப்பது மாதிரி காட்டிவிட்டு மறுமக்கம் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதால்தான் கபட நாடகம் என்று பலரும் விமர்சிக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது செங்கோட்டையனுடன் மாஜிக்கள் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போது மாநிலங்களவையில் தம்பிதுரை நிர்மலா பேச்சுவார்த்தை.
சட்டப்பேரவையினையும், நாடாளுமன்றத்தையும் கட்சி விவகார பேச்சுவார்த்தை நடத்தும் இடமாக மாற்றிவிட்டதாகவும் அதிமுக, பாஜக குறித்து விமர்சனம் எழாமலில்லை.
vouy6z