
நிர்மலாதேவி
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிர்மலாதேவி சிக்கிவிட்டாலும் தப்பியது யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை. இவர் யாருக்காக மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றார் என்ற கேள்விக்கும் இன்னமும் விடை கிடைத்த பாடில்லை.

கடந்த 2018ம் ஆண்டில் நிர்மலாதேவி விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்தான் நிர்மலாதேவி. இவர் உயர்கல்வித்துறை மற்றும் அரசியல் முக்கிய புள்ளிகளின் பாலியல் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்துவதாக பூகம்பம் வெடித்தது. இவர் மாணவிகளிடம் செல்போனில் பேசி மூளைச்சலவை செய்யும் ஆடியோக்களும் வெளிவந்து அதிரவைத்தன.
அரசு அதிகாரிகள் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை இந்த குற்றச்சாட்டில் சிக்கியதால், அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த விவகாரத்தை விசாரிக்க, விசாரணைக்குழுவினை அமைத்தார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்தது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பலரும் தப்பிவிட, நிர்மலாதேவிக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் நிர்மலா தேவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
நிர்மலாதேவியை மட்டும் பலிகடாவாக்கி விட்டு குற்றவாளிகள் அனைவரும் தப்பிவிட்டனர் என்று குற்றம் சாட்டுகிறார் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்.

‘’மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது நிர்மலாதேவி என்றால், மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க நிர்மலாதேவியை நிர்ப்பந்தித்தது யார்?’’ என்ற கேள்வியினை முன்வைத்துள்ளார் பசும்பொன் பாண்டியன்.
அவர் மேலும், ‘’பேராசிரியை நிர்மலாதேவி ஓர் அம்பு மட்டுமே என்று வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்படி என்றால் அந்த அம்பை எய்தது யார்?’’ என்று கேட்கிறார்.

நிர்மலாதேவிக்கு தண்டனை வழங்கியதோடு இந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இந்த வழக்கினை நேர்மையான முறையில் விசாரணை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பசும்பொன் பாண்டியன்.
மறுபடியும் முதலில் இருந்தா?