கர்நாடக அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
லண்டனை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காஷ்மீரி பண்டிட்டும் பேராசிரியருமான நிதாஷா கவுல், தனது X தள கணக்கில் இந்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
‘அரசியலைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை’ என்கிற தலைப்பில் நடக்க இருந்த மாநாட்டில் பங்கேற்க கர்நாடக அரசு நிதாஷா கவுலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதை ஏற்று, இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வந்த நிதாஷா கவுல், பல மணி நேரங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அவரை லண்டனுக்கு நாடுகடத்தி இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து, தனது X தள கணக்கில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் பற்றி பேசியதற்காக இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தேவையான ஆவணங்கள் இருந்தபோதிலும், இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பல மணி நேரங்கள் தடுத்து நிறுத்தியத்தோடு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை மறுத்தும் அதிகாரிகள் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக பேராசிரியர் நிதாஷா கவுல் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்வினையாற்றிய கர்நாடக மாநில பாஜக, நிதாஷா கவுல் இந்திய-விரோதி என்றும் பாகிஸ்தான்-அனுதாபி என்றும் விமர்சித்துள்ளது.
மேலும், நிதாஷா கவுலை மாநாட்டிற்கு அழைத்து காங்கிரஸ் கட்சி “இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்” ஏற்படுத்தியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.