நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்தியானந்தா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா. பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் எல்லாராலும் அறியப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், தற்போது அவர் ‘கைலாசா’ என்ற நாட்டில் இருப்பதாக அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நித்தியானந்தாவின் பெயரைச் சொல்லி தேனி மாவட்டத்தில் நில அபகரிப்பில் ஈடுபட முயன்றவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தொடர்புடையவர் தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போதுதான், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி பரத சக்கரவர்த்தி, நீதித்துறைக்கு சவால் விடும் நித்தியானந்தாவைக் கண்டித்து, எந்த வழக்கிலும் ஆஜராவதைத் தவிர்க்கும் சாமியார் நித்தியானந்தாவின் சொத்துகளை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்றும் கேட்டிருக்கிறார்.
உலக வரைபடத்தில் இதுவரை உருவாகாத நாடு, கைலாசா. கூகுள் மேப் உள்பட எதிலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. பாலஸ்தீனம் போன்ற முழுமையான விடுதலை பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளை உலக நாடுகள் பல அங்கீகரித்திருக்கின்றன. ஆனால், கைலாசாவை எந்த நாடும் அங்கீகரிப்பதல்ல, அடையாளம் காணக்கூட முடியவில்லை. பசிபிக் பெருங்கடலில் பல தீவுக் கூட்டங்கள் உண்டு. அதுபோல மற்ற சில பெருங்கடல்களிலும் உண்டு. தனியார் இதனை விலைக்கு வாங்க முடியும். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது செயின்ட்கீட்ஸ் தீவு இது போல அவருடைய குடும்பத்தினரின் சொத்தாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உலகின் பெரும் பணக்காரர்கள் இப்படிப்பட்ட தீவுகளை விலைக்கு வாங்குவார்கள். அதற்கு தங்களின் விருப்பமான பெயரிடுவார்கள். ஆனால், அது நாடாக அங்கீகரிக்கப்படாது. அதுபோல கைலாசாவும் ஒன்றாக இருக்கலாம்.
அந்த கைலாசா எங்கே இருக்கிறது என்பதும், எந்த இடத்தை கைலாசா என்று நித்தியானந்தா உரிமை கொண்டாடுகிறார் என்பதும் அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியாத ரகசியமல்ல. இன்றைக்குள்ள தகவல் தொழில்நுட்ப வசதியில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். கண்டு பிடித்தும் இருக்கக்கூடும். அப்படியிருந்தால், நீதிமன்றம் கண்டிக்கிற நிலை வந்தும், ‘கைலாசா’வில் இருந்து நித்தியானந்தாவை ஏன் கொண்டு வர முடியவில்லை?
இந்தியாவில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது. அதிகாரம்-பணபலம் ஆகியவை சட்டத்தில் தனிச் சலுகைகளைப் பெறக் கூடிய ஆற்றல் வாய்ந்தவை. அதைவிட ஆற்றல் வாய்ந்தது ஆன்மிகம் என்ற லேபிளை ஒட்டியிருக்கும் சாமியார்கள். மதவாத அரசியல் ஆட்சி செய்யும் நாட்டில் இது சர்வசாதாரணமானது. மதச்சார்பற்ற அரசுகள் இருந்த போதும் இத்தகைய சாமியார்கள் சட்டத்தில் தங்களுக்கேற்ற சந்து பொந்துகளைக் கண்டுபிடித்து தப்பித்து விடுவார்கள்.
பிரேமானந்தா சாமியாரை நினைவிருக்கிறதா? திருச்சி விராலிமலை அருகே ஆசிரமம் நடத்தி, பெண் சீடர்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியதாலும், ஒரு சீடரின் மரண மர்மத்தை மறைத்த விவகாரத்திலும் ஆசிரம சீடர்களாலேயே புகார் தெரிவிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறைவாசக் காலத்திலேயே மரணமடைந்தவர் பிரேமானந்தா. அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முதல் டெல்லி வரை செல்வாக்கு பெற்றிருந்தார். பத்திரிகைகள் மூலம் அவருடைய ஆசிரம ரகசியங்கள் அம்பலமானதால் பிரேமானந்தாவால் தப்பிக்க முடியவில்லை. ஆனால், அவருடைய பெண் சீடரான திவ்யா மாதாஜி தப்பித்து விட்டார். இன்று வரை அவர் எந்த ‘கைலாசா’வில் இருக்கிறார் என்பதோ, அல்லது காலம் கடந்த நிலையில் கைலாசத்திற்கே சென்றுவிட்டாரா என்பதோ யாருக்கும் தெரியாது. பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் சொகுசான முறையில் நவீன வாழ்க்கையை அனுபவித்தவர் அவர். கைலாசாவில் இருப்பவர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள்.
ஒரு காலத்தில் சாமியார்கள் என்றால் முற்றும் துறந்தவர்கள் என்று கருதப்பட்டது. இப்போது ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார்கள் கார்ப்பரேட் சாமியார்கள். உலகமயமாக்கலும், புதிய பொருளாதாரக் கொள்கையும் எந்தத் துறையினருக்கு சாதகமாக இருந்ததோ தெரியாது. சாமியார்கள் என்ற பெயரில் தியானம், யோகம், மனவளம், ஆன்மபலம் என்ற வார்த்தை லேகியங்களை ஹை-டெக் புராடக்டாக விற்கத் தெரிந்தவர்களுக்கு இது பொற்காலமாக அமைந்துள்ளது. நாட்டின் ஆட்சி நிர்வாகத் தலைமைப் பீடத்தில் இருப்பவர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால், இந்தியாவுக்கே சவால் விடுகிறது கைலாசா.
காவியைப் புனிதமாகப் பலரும் நினைக்கிறார்கள். அந்த நிறத்துக்குள்தான் அக்கிரமங்கள் அனைத்தும் அரங்கேறுகின்றன.