ஒரு முறை கூட சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதில்லை. ஆனால், 9 முறை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து பிரமிக்க வைத்த நிதிஷ்குமார். இந்த முறையும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதலமைச்சர் அரியணை ஏறி, பீகார் அரசியலின் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கிறார் நிதிஷ்குமார்.
2005ம் ஆண்டில் இருந்து 2025 ம் ஆண்டு வரையிலும் 20 ஆண்டுகளாக தொடர்ந்து பீகாரை கையில் வைத்திருக்க நிதிஷ்குமார் வகுத்த வியூகம் என்ன? சூட்சுமம் என்ன? பீகாரின் அசைக்க முடியாத சக்தியாக நிதிஷ்குமார் விளங்குவது எப்படி?

பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள கல்யான் பிகா கிராமம்தான் நிதிஷ்குமாரின் பூர்வீகம். பாட்னா அடுத்த பக்தியார்பூரில் 1951ல் பிறந்த நிதிஷ்குமார், குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். பாட்னாவில் பொறியியல் கல்லூரியில் படித்து மின்வாரியத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார், தந்தையின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு அரசியலில் பிரவேசம் செய்தார்.
தனக்கு வந்த பிரதமர் நாற்காலியைக் கூட புறந்தள்ளி, தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் தலைவராக விளங்கிய ஜெ.பி. எனும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது கொண்ட ஈர்ப்பினால் அவரது ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் நிதிஷ்குமார். இன்றைக்கு போட்டியாளர்களாக இருக்கும் லாலு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் அன்றைக்கு ஜனதா கட்சியின் நம்பிக்கைக்குரிய அடுத்த தலைமுறை தலைவர்களாக விளங்கினர்.

இந்திரா காந்திக்கு எதிராக களமாடிய ஜனதா கட்சி சார்பில் 1977ல் முதல் முறையாக அரசியல் களம் கண்டார் நிதிஷ்குமார். முதலிரண்டு தேர்தல்களில் தோல்வியுற்றாலும் 1985ல் அதே ஹர்நாட் தொகுதியில் வென்றார்.
விபிசிங் முயற்சியால் 1988ல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளம் உருவானது. 1989ல் ஜனதா தளம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பார் தொகுதியில் வென்று விபி சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் நிதிஷ்குமார்.
1990 சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் ஆட்சியைப் பிடித்தது ஜனதா தளம். லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சரானார். அவர் முதலமைச்சர் ஆனதில் நிதிஷ்குமார் பெரும்பங்கு வகித்தார்.

1994ல் லாலு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஜனதா தளத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி, ‘சமதா’ கட்சியைத் தொடங்கினார் நிதிஷ்குமார். 1995 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய நிதிஷ்குமாருக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அந்த தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் ஆனார் லாலு பிரசாத் யாதவ்.
ஆனால், 1997ல் கால்நடை தீவன ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் லாலு பிரசாத் யாதவ். ராஜினாமா செய்தவற்கு முன்பாக ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடினார் லாலு பிரசாத் யாதவ். அவசர அவசரமாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கி சட்டமன்றத்தில் ஆதரவை பெற்று தன் மனைவி ராப்ரி தேவியை சட்டமன்ற மேலவை உறுப்பினாராக்கி முதலமைச்சரும் ஆக்கினார். 5ம் வகுப்பு மட்டுமே படித்து அரசியல் ஆத்திச்சூடியே அறியாத ராப்ரிதேவி முதலமைச்சர் ஆனது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் 1998 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் வென்று மத்திய ரயில்வேதுறை அமைச்சரானார் நிதிஷ்குமார்.
2000ல் நடந்த சட்டமன்ற தேர்தல் மூலம் மாநில அரசியல் பக்கம் திரும்பினார் நிதிஷ்குமார். அந்த தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதில் நிதிஷ்குமாருக்கு 151 இடங்கள் கிடைத்தது. ஆனால் தனிப் பெரும்பான்மையாகவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 124 இடங்கள் கிடைத்தது. இதனால் இரண்டு கூட்டணி கட்சிகளுக்குமே ஆட்சிமைக்க தேவையான 163 இடங்கள் மெஜாரிட்டி இல்லை. ஆனாலும் அப்போது மத்தியில் வாய்பாய் பிரதமராக இருந்ததால் அவரின் ஆசீர்வாதத்தினால் முதலமைச்சரானார் நிதிஷ்குமார்.

7 நாளில் பறிபோன முதல்வர் நாற்காலி!
வாஜ்பாய் தயவில் முதலமைச்சர் ஆனாலும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் 7 நாளிலேயே முதலமைச்சர் பதவியை ராஜினிமார் செய்தார் நிதிஷ்குமார். பெரும்பான்மையை காட்டி முதலமைச்சரானார் ராப்ரிதேவி. அந்த ஆட்சிக்காலம் முழுவதும் அவரே முதலமைச்சராக இருந்தார்.
2000 முதல் 2002ம் ஆண்டு வரையிலும் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக வலம் வந்தார் நிதிஷ்குமார்.
இதற்கிடையில் பீகார் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 2001ல் பீகார் மாநிலத்தில் இருந்து 18 மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக உருவெடுத்தது ஜார்கண்ட். இதனால் 342 தொகுதிகள் என்றிருந்த பீகாரின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 243 ஆக குறைந்தது.

குடியரசுத்தலைவர் ஆட்சி:
2003ம் ஆண்டில் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்த நிதிஷ்குமார், 2005 பிப்ரவரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் லாலு கட்சிக்கு 75 இடங்களும், நிதிஷ் கட்சிக்கு 55 இடங்களும், பாஜகவுக்கு 37 இடங்களும் கிடைத்தது. யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஆட்டம் ஆரம்பம்:
குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த அதே 2005ம் ஆண்டில் நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் நிதிஷ்குமார். அந்த தேர்தலின் முடிவில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த லாலு கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதலமைச்சரானார் நிதிஷ்குமார். அப்போது மக்களவை எம்.பி. ஆக இருந்ததால் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி 2வது முறையாக முதலமைச்சரானார் நிதிஷ்குமார். அப்போதே லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நிதிஷ்குமார்.
2005 க்கு பிறகு முழுமையாக மாநில அரசியலில் இறங்கிவிட்டார் நிதிஷ்குமார். 2010 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாலும் தனித்து போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றது நிதிஷ் கட்சி. பாஜக வென்ற 91 இடங்களையும் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சரானார். அந்த முறை அவர் 3வது முறையாக முதலமைச்சரானார்.
ராஜினாமா:
2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 வருட பாஜக உறவை முறித்துக்கொண்டு தனி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமாருக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்தது. வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததால் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். அதனால் அவரது கட்சியில் இருந்து ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாபந்தன் கூட்டணி
2015 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார் நிதிஷ்குமார். 2017ல் லாலுவின் ரயில்வே துறை விவகார வழக்கு பூதாகரமாக வெடித்ததால் காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் முதலமைச்சரானார். 2020ல் பாஜக கூட்டணியில் மீண்டும் முதலமைச்சரானார். அந்த தேர்தலில் பாஜக 74 இடங்களை வென்றிருந்தது. ஆனால் 43 இடங்களை மட்டுமே வென்றிருந்த நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கியது தேசிய ஜனநாயக கூட்டணி.
பிரதமர் கனவு:
2024 மக்களவை தேர்தலில் பிரதமர் கனவில் பாஜகவை கழற்றி விட்டுவிட்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசுடன் கைகோர்த்து மீண்டும் முதலமைச்சரானார்.
இந்தியா கூட்டணி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்று நினைத்திருந்த நிதிஷ்குமாருக்கு அது நடக்காததால் அக்கூட்டணியில் இருந்து விலகி செத்தாலும் பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்ற பேச்சை வாபஸ் வாங்கிக்கொண்டு பாஜகவுடன் கைகோர்த்து 9வது முறையாக முதலமைச்சரானார்.
மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க முக்கிய நபராக உருவெடுத்திருந்தார் நிதிஷ்குமார். அந்த வகையில் இப்போது நடந்து முடிந்த 2025 பீகார் சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே போட்டியிட்டு மீண்டும் 10வது முறையாக பீகார் மாநில முதலமைச்சர் ஆகி இருக்கிறார்.

20 ஆண்டுகள் தொடர் வெற்றிக்கு காரணம்?
லாலு – நிதிஷ் இருவருமே பீகாரின் இரு துருவங்கள். பீகாரின் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாக லாலு பிரசாத் யாதவ் விளங்குவது போன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாக விளங்குகிறார் நிதிஷ்குமார்.
ஆனாலும், லாலுவுக்கு இருந்த குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் பலவீனம்தான் நிதிஷுக்கு பலமாக அமைந்தது. லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ்குமார் இருவரும் பீகார் அரசியலின் இருபெரும் துருவங்கள் என்றாலும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக லாலு பக்கம் செல்லாமல் நிதிஷ் பக்கமே முதலமைச்சர் அரியணை இருப்பதற்கு காரணம், கூட்டணிகள்தான். பாஜக வந்துவிடக்கூடாது என்று ஆர்.ஜே.டியும், ஆர்.ஜே.டி. வந்துவிடக்கூடாது என்று பாஜகவும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு நிதிஷ்குமாரை ஆதரிப்பதால்தான் 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் கையில் இருக்கிறது பீகார்.
லாலு பிரசாத் யாதவ், அடுத்து அவரது மனைவி ராப்ரி தேவி, அடுத்து அவரது மகன் தேஜஸ்வி யாதவ் என்று எதிர்தரப்பில் போட்டியாளர்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் மறுமுனையில் 20 ஆண்டுகளாக நிதிஷ்குமாரே போட்டியாளராக நிற்கிறார்.

MLA ஆகாமலேயே 10வது முறை CM
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகாமலேயே 9வது முறையாக முதலமைச்சர் அரியணை ஏறி இருக்கிறார் நிதிஷ்குமார். ஒவ்வொரு முறையும் பீகார் மாநில சட்டமேலவை எனும் எம்.எல்.சி. உறுப்பினராகவே இருந்து முதலமைச்சராகி இருக்கிறார். தற்போது 2025ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தேர்தலில் போட்டியிடாமலேயே முதலமைச்சராக அரியணை ஏறுகிறார் நிதிஷ்குமார். 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த அமோக வெற்றியை சாத்தியமாக்கிய நிதிஷ்குமாருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
தேர்தலில் ஒன்றும் போட்டியிடாதவர் அல்ல நிதிஷ்குமார். 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் ஹர்னாத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் நிதிஷ்குமார். 1980ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1985ல் அதே ஹர்னாத் தொகுதியில் வென்றார். எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற்றாலும் எம்.பியாகவே தொடர விரும்பியதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் நிதிஷ்குமார். 1989,1991, 1996, 1998, 1999 தேர்தல்களில் தொடர்ந்து 5 முறை வென்று எம்.பி.ஆனவர் நிதிஷ்குமார்.
1995 பீகார் சட்டமன்ற தேர்தலில்தான் கடைசியாக போட்டியிட்டார் நிதிஷ்குமார். அந்த தேர்தலில் ஹர்னாத் தொகுதியில் அவர் வென்று எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின்னர் எம்.எல்.சி. உறுப்பினராகவே இருந்து முதலமைச்சர் ஆகி வருகிறார்.

அங்கீகாரம்
கூட்டணி நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றி வரும் கூட்டணி பலத்திலேயே வென்று வரும் நிதிஷ்குமாருக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
வேலைவாய்ப்பு, தொழில்மயமாக்கலில் உள்ள குறைபாடுகளால் இளைஞர்கள் ஆதரவு குறைந்து நிதிஷ்குமாரின் செல்வாக்கை பாதித்தாலும் வக்ஃப் தொடர்பான சர்ச்சைகளால் சிறுபான்மை மக்கள் ஆதரவு குறைந்துள்ளது என்றாலும், சமூக வாக்குகளை தக்க வைத்து வருகிறார் நிதிஷ்குமார். குர்மி சமூகத்தின் 7% வாக்குகளும், கோரி சமூகங்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் 26% சேர்த்து 33% வாக்குகளை அவர் தக்க வைத்து வருகிறார். இது தவிர பெண்களின் வாக்குகளையும் அவர் கணிசமான அளவில் தக்க வைத்து வருகிறார்.

நடந்து முடிந்த 2025 சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளை வென்று பாஜக முதலிடத்தில் உள்ளது. 85 தொகுதிகளை வென்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2வது இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருந்தாலும் கூட்டணியின் வெற்றிக்கு நிதிஷ்குமாரின் பங்கு அளப்பரியதாக கருதுகிறது பாஜக. அதனால்தான் நிதிஷ்குமார் அரியணை ஏறுகிறார். இதே மாதிரி பல தேர்தல்களில் 2வது 3வது இடம் வந்தாலும் கூட்டணியின் ஒப்பந்த தர்மத்தின் படி நிதிஷ்குமாரே முதலமைச்சர் அரியணையில் ஏறி இருக்கிறார். இது அரசியலில் அவருக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம்.
கூட்டணி விசயத்தில் நிலையற்ற முடிவுகள் நிதிஷ்குமாரின் செல்வாக்கை குறைத்துள்ளன என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், நிதிஷ்குமாரை பொறுத்தவரையிலும் இது ஒரு தேர்தல் வியூகமாகவே உள்ளது. அவர் எந்த கூட்டணியுடன் இணைந்தாலும் அந்த கூட்டணி வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதால் பீகார் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் நிதிஷ்குமார்.
