எதிரிகளின் மரணம் கூட எவருக்கும் இரக்கத்தைத் தந்துவிடும். ஆனால், கொடூர பாலியல் குற்றவாளிகளின் மரணத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட உறவினர்கள் கூட இரக்கத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை. நிர்பயா குற்றவாளிகளின் மரணங்களை நாடே கொண்டாடித் தீர்த்த நிலையில், நிர்பயா-2 கொலைக்குற்றவாளிக்கும் மரண தண்டனை அளிக்க கேட்டு நாடெங்கிலும் ஓங்கி குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், கிருஷ்ணகிரி சிவராமன் மரணத்திற்கும் யாரும் இரக்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பில் இருந்த சிவராமன், பொதுநலத்தில் அக்கறை உள்ளவர் போல் இனம், மொழி என்று பொதுவெளியில் பேசி, ஊருக்கு நல்ல உபதேசம் செய்துகொண்டு, தான் மட்டும் அதற்கு நேர்மாறாக இருந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
பள்ளிப்பருவத்தில் என்.சி.சி. மாணவராக இருந்த போது பெற்ற மெடல், சான்றிதழ்களை மாதிரியாக வைத்துக்கொண்டு போலி என்.சி.சி. முகாம் நடத்தி வசூல்வேட்டை நடத்தி வந்திருக்கிறார். ’மாயோன் குரூப் ஆப் கம்பெனி’ என்ற நிறுவனத்தை தொடங்கி பிட்காயின் போன்ற நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்து வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. தன்னை வழக்கறிஞர் என்றும் சொல்லிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தவிர, 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘இது அரசியல்’ என்ற பயிற்சிப்பாடத்தை இலவசமாக பயிற்றுவித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், பர்கூர் அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும் 17 மாணவிகளை வைத்து என்.சி.சி. முகாம் நடத்தி இருக்கிறார். பள்ளி வளாகத்திலேயே தங்கியிருந்து மாணவிகள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். பள்ளி வளாகத்திலேயே நடைபெறும் முகாம் என்பதால் பெற்றோர்களும் தங்கள் மகள்களை நம்பிக்கையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி அதிகாலையில் பள்ளி ஆடிட்டோரியத்தில் தூங்கிக்கொண்டிந்த மாணவிகளில் 8ம் வகுப்பு மாணவியை எழுப்பி தனியே அழைத்துச்சென்று போய் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சக மாணவிகளுக்கு விபரம் தெரியவந்து பள்ளி தாளாளரிடம் கண்ணீர் வடிக்க, அவரோ பள்ளியை காப்பாற்றும் நோக்கில் மாணவிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், ஆகஸ்ட் 16ம் தேதி இரவில் அந்த மாணவி வயிற்று வலியால் துடித்தபோது பெற்றோருக்கு உண்மை தெரியவந்திருக்கிறது. ஊருக்கும் இந்த உண்மை தெரியவந்ததும்தான் மேலும் சில மாணவிகள் சிவராமனால் பாதிப்படைந்தது தெரியவந்திருக்கிறது.
மாணவி தரப்பின் புகாரின் பேரில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை, சிவாராமன் உள்பட 11 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைதானார்கள். கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றபோது தப்பியோடியதில் கீழே விழுந்து வலது கால் முறிந்து சிகிச்சை பெற்று வந்த சிவராமன், ராயக்கோட்டை தனியார் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நடத்திய போலி என்.சி.சி. முகாமில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி அதிரவைத்தது.
சிவராமனின் பாலியல் குற்றச்சாட்டுகள் விஸ்வரூம் எடுத்து வந்த நிலையில், பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த புகார்களும் குவிந்தன. தன்னை வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு ரூ.36 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர்.
சிவராமன் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து சிவராமன் நீக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்து விசாரணை நடந்து வந்தது. சிவராமனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ரகசியமாக வாக்குமூலம் தரலாம் என்று போலீசார் அறிவித்திருந்தனர். இலவச அரசியல் பயிற்சி வகுப்பின்போதும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையில், தப்பியோடியபோது கால் உடைந்ததில், கைது பயத்தில் எலி பேஸ்ட் திண்றதில் உடல் பாதிக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவராமனின் தந்தை அசோக்குமார், மதுபோதையில் நேற்றைய தினம் மாலையில் சாலையில் தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
துளியளவும் இரக்கமில்லாமல் பிஞ்சுகளை சிதைத்த சிவராமனின் மரணம் யாருக்கும் இரக்கத்தை தரவில்லை.