சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் பலர், பல்வேறு அதிருப்திகளை தெரிவித்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை கடந்து மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற போதிலும், சீமான் எதேச்சதிகாரமாக கட்சியை நடத்துகிறார் என்று குற்றம் சாட்டி மாவட்ட அளவில் பல நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.
2009 இலங்கை இராணுவத் தாக்குதலின் போது ஈழத் தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சீமான் எதையும் செய்யவில்லை என நாதக முன்னாள் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக திமுக மற்றும் காங்கிரஸை மட்டும் வெறுமனே சீமான் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவோ, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவோ மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க முன்வரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சீமானுக்கு எதிராக அதிருப்தியை தெரிவித்து முதல்முறையாக கிருஷ்ணகிரியில் மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். அதை தொடர்ந்து விழுப்புரம் (வடக்கு) மாவட்ட செயலாளர் சுகுமார் மற்றும் விழுப்புரம் (மேற்கு) மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் நாதகவில் இருந்து வெளியேறினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன், கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகளான புகழேந்தி மாறன் மற்றும் தனசேகரன் போன்றவர்களோடு இணைந்து தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகிகள் பலர் இதுவரை எந்தக் கட்சியிலும் சேரவில்லை, அதற்கு இணையான அமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாதகவில் இருந்து பிரிந்த தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் வரும் நவம்பர் 27-ம் தேதி திருச்சியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு மாற்றாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான டி.வேல்முருகனை முன்னிறுத்தவும் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் திட்டமிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ம.தி.மு.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளால் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 27 அன்று வேல்முருகனை முன்னிறுத்தி, திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தி நாதக முன்னாள் நிர்வாகிகள் தங்கள் பலத்தை காட்டவும் நாதகவின் இன்னும் பல நிர்வாகிகளையும் இளைஞர்களையும் ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.