ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடியை இழக்க விரும்பவ் இல்லை என்று சொல்லி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
’’2026ல் அதிமுக ஆட்சி வரும். அந்த எண்ணத்தை புரட்சித்தலைவர் ஆத்மா, புரட்சித்தலைவி ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களிடத்தில் இருக்கிறது’’ என்று வைத்திலிங்கத்திடம், ஓபிஎஸ்சை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாரே எடப்பாடி? என்ற கேள்விக்கு,
‘’நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. எடப்பாடியையும் இழக்க விரும்பவில்லை. மற்றவர்களையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள் , விரும்பாதவர்கள் அவர்களாகவே வெளியேறிவிடுவார்கள். இது காலத்தின் கட்டாயம்’’ என்றவரிடம், அதிமுக ஒற்றைத்தலைமைக்கு வருமா? இரட்டைத்தலைமைக்கு வருமா? என்ற கேள்விக்கு,
‘’ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா? என்பதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும். 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியின் செயல்பாடுகளை பார்த்துதான் எடப்பாடி இந்த இயக்கத்தை அழித்துவிடுவார் என்று டிடிவி தினகரன் சொன்னார். உண்மையும் அதுதான்.
2021ல் அமமுகவும், தேமுதிகவும் வேண்டும் என்று சொன்னபோது தனித்து நின்றே 150 இடங்களில் வந்துவிடலாம் என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. அது போல நாடாளுமன்ற தேர்தலிலும் மெகா கூட்டணி வரும். 40%க்கு மேல் பெற்றுவிடலாம் என்று சொல்லி , 20% வரும் அளவுக்கு இந்த இயக்கத்தை ஒரு மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார். அதை நினைத்தும் டிடிவி தினகரன் சொல்லி இருப்பார்.
சசிகலா – ஓபிஎஸ் -டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணம். டிசம்பருக்கும் ஒற்றுமையாக ஆகிவிடுவார்கள். அடுத்து அதிமுக ஆட்சிதான். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றார் உறுதியாக.