அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வ பத்திரிகையாக ’நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் டிடிவி தினகரன் அதிமுகவை விட்டு வெளியேறிய பின்னர் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அவர் வசம் சென்றுவிட்டது.
இதனால் ‘நமது அம்மா’ அதிமுகவுக்கு தனி நாளிதழ் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் இந்த பத்திரிகையை கவனித்துக்கொண்டனர்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டு விட்டதால் அவரை தனித்து அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரது மகன் பிரதீப், நமது அம்மாவில் பணிபுரிந்த பத்திரிகையாளர்களை வைத்து ‘நமது புரட்சித் தொண்டன்’நாளிதழை தொடங்கினார். இதன் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடந்தது.
ஓபிஎஸ், ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மருது அழகுராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் இந்த நாளிதழில் வெளிவந்து கொண்டிருந்தன.
அதிமுகவில் இருப்போரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்த ஓபிஎஸ், எப்படியாவது அதிமுகவிற்குள் சென்றுவிட போராடியும் அதுவும் முடியாமல் போக, பாஜக பார்வையும் இல்லாமல் இருக்கும் நிலையில் புரட்சித்தொண்டனை கண்டுகொள்ள வில்லை ஓபிஎஸ்.
கடந்த சில மாதங்களாகவே சம்பளம் கொடுக்காததால் பத்திரிகையாளர்கள் புலம்பித்தவித்து வந்துள்ளனர். தீபாவளிக்கும் சம்பளம் வராததால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பத்திரிகையாளர்கள் திரண்டு ஜெயபிரதீப்பிடம் முறையிட்டுள்ளார்கள்.
அதற்கு அவர், ‘’கட்சிக்கு ஆபீஸ் பிடிக்குறதுக்கே பணம் இல்லாம தடுமாறிக்கிட்டு இருக்குறோம். இது பத்திரிகை பத்தி எல்லாம் யோசிக்கிறதுக்கு நேரம் இல்ல. உங்களுக்கு எல்லாம் சம்பளம் கொடுக்குறதுக்கும் இப்ப வழி இல்ல. பேசாம பத்திரிகையை நிறுத்திடுங்க’’ என்று சொல்லி இருக்கிறார்.
இதில் ரொம்பவே அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், தன்னை நம்பி வந்த கட்சிக்காரர்களை நட்டாற்றில் விட்டதை போலவே நம்மளயும் விட்டுட்டாரே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.