தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்ட வாழக்கில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.
கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக நாகமுத்துவுக்கும் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனையில் நாகமுத்து தாக்கப்பட்டார்.
இதன் பின்னர் கடந்த 2012ல் டிசம்பர் 7ம் தேதி அன்று நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓ.ராஜா உள்ளிட்டோர் காரணம் என்று பூசாரி கடிதம் எழுதி வைத்திருந்தது போலீசில் சிக்கியது.
இதையடுத்து பெரியகுளம் நகராட்சித்தலைவராக இருந்த கோயில் அறங்காவலராக இருந்த ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன், சிவக்குமார், லோகு, சரவணன், ஞானம் உள்ளிட்ட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினை அடுத்து 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதற்கொண்டு இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தபோதே பாண்டி என்பவர் உயிரிழந்துவிட்டதால், 6 பேர் மீது விசாரணை நடந்து வந்தது.
வழக்கின் விசாரணைகள் நிறைவுற்று இன்று நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார். ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரும் இவ்வழக்கில் விடுதலை என்று கூறினார்.