ஆக்டோபஸ் என்பது கடலில் வாழும் முதுகெலும்பில்லா உயிரினமாகும். இது செஃபலோபோடா (Cephalopoda) வகுப்பைச் சேர்ந்தது மற்றும் எட்டு கைகளைக் கொண்டிருப்பதே இதன் முக்கிய அடையாளம் ஆகும். எலும்புக்கூடு இல்லாததால் மிகவும் நெகிழ்வான உடலமைப்பைக் கொண்ட இந்த ஆக்டோபஸ், சிறிய இடங்களிலும் எளிதாக நுழைய முடியும்.

மேலும், அதிக புத்திசாலித்தனம், நிறம் மாற்றும் திறன், எதிரிகளிடமிருந்து தப்பிக்க மை வெளியிடும் தன்மை ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மேலும், உலகம் முழுவதும் கடல்களில் வாழும் ஆக்டோபஸ்களுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவை ஆழ்கடல் முதல் கரையோர பகுதிகள் வரை பல்வேறு கடல் சூழல்களில் வாழ்ந்து, கடல் சூழலியலில் முக்கிய பங்காற்றுகின்றன.
ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :
இந்நிலையில், சமீப காலங்களில் இங்கிலாந்தின் கடற்பரப்பில் ஆக்டோபஸ்களின்(octopuses) எண்ணிக்கை சாதாரணத்தை விட சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளதாக கடல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தென் இங்கிலாந்து கடற்கரையோர பகுதிகளில் மீனவர்கள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் அதிக அளவில் ஆக்டோபஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த அபூர்வ உயர்வு, கடல் உயிரியல் வல்லுநர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

கடல் வெப்பநிலை மாற்றம்
நிபுணர்களின் கருத்துப்படி, சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மென்மையான குளிர்காலம் மற்றும் கடல் நீரின் வெப்பநிலை உயர்வு ஆக்டோபஸ்களின் பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்கியிருக்கலாம் என்றும் வெப்பமான நீரில் ஆக்டோபஸ் முட்டைகள் பாதுகாப்பாக வளர்வதோடு, இளம் ஆக்டோபஸ்களின் உயிர்வாழ்வு வாய்ப்பும் அதிகரிக்கிறது என்றும் இதனால் அவற்றின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால ஆய்வுகளின் தேவை
ஆக்டோபஸ்களின் இந்த திடீர் பெருக்கம் கடல் சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இது மற்ற கடல் உயிரினங்களின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கும், மீன்வளத்திற்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் விஞ்ஞானிகள் (Scientists) தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்தின் இன்னொரு எச்சரிக்கை சிக்னலா என்பதை எதிர்கால ஆய்வுகள் தான் உறுதி செய்யும்.
