
கட்சியாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும் மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் வலிமையான குரல்கள் கண்டிப்பாகத் தேவை. அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மேடையில் ஒலித்த வலிமையான குரல்கள் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய வரலாறு உண்டு. தற்போதுள்ள தொலைக்காட்சி ஊடக விவாதங்கள், சமூக வலைத்தள காணொளிகள் ஆகியவற்றில் கட்சியின் கருத்துகளை எடுத்து வைக்கவும், எதிர்க் கருத்துகளுக்கு பதிலளிக்கவும் ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் வலிமையான வாதங்களை வைக்கக்கூடிய ஆட்கள் வேண்டும். இதில் ஆளுங்கட்சிக்குத்தான் கூடுதல் நெருக்கடி.
ஒரு கட்சி தன்னுடைய வளர்ச்சிக்காலத்தில் பல பேச்சாளர்களைக் கொண்டிருக்கும். அதில் நட்சத்திரப் பேச்சாளர்களும் இருப்பார்கள். அதே கட்சி, ஆளுங்கட்சியாகும்போது, அதற்கு முன்பு வரை அடித்து ஆடிய பேச்சாளர்களும் நிதானித்து பேச வேண்டிய சூழல் வரும். காரணம், ஆளுங்கட்சிக்கு சவால்கள் அதிகம். எதிர்க்கட்சிகளைப் போல சவால் விட முடியாது. தன்னுடைய ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து மக்களிடம் பேச வேண்டும். கிட்டத்தட்ட தடுப்பாட்டம் ஆடுவது போன்ற நிலைமைதான். மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆட்சி இருந்தால், தடுப்பாட்டமும் வீணாகிவிடும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இதை உணர்ந்திருந்தவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் ஆட்சிக்கு வந்த நாள் முதல் தன்னுடைய ஆட்சியின் சாதனைத் திட்டங்களை முன்னிறுத்தி அரசியல் களத்தை எதிர்கொள்கிறார். அந்தத் திட்டங்களால் மக்கள் பெற்ற பயன்களே கட்சிக்கு தேர்தல் களத்தில் பலமாக இருக்கும் என நம்புகிறார். ஒப்பீட்டளவில் இந்திய அளவில் பல மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் முன்பிருந்த ஆளுங்கட்சிக்கும் இருந்த ஆட்சிக்கெதிரான மக்களின் உணர்வு இன்றைய தமிழ்நாடு அரசுக்கு இல்லை. குறைகள், கோரிக்கைகள் மக்களிடம் நிறைந்திருக்கின்றன. எதிர்ப்பு என்பது குறைவாகவே உள்ளது.
அறிவிக்கப்படும் திட்டங்கள், செயல்வடிவம் பெறவேண்டும், அது தகுதியுள்ள பயனாளிகளுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதற்கான பல கட்ட ஆய்வுகளை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கெள்ளவிருப்பதால், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார், பி.அமுதா ஆகிய நால்வரையும் செய்தித் தொடர்பாளர்களாக அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பிலான செய்தித் தொடர்பாளர்கள் என்பது இதுவே முதல் முறை.
அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமாகத்தான் அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், ஊடகங்களுக்கான புள்ளிவிவரங்கள் ஆகியவை வெளியிடப்படும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உள்ள மக்கள் தொடர்பு அலுவலர்களும் இந்தப் பணியை கவனிப்பார்கள். அதற்கு மாறாக, மூத்த அதிகாரிகளை நியமித்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தித் தொடர்பாளர்களாகிவிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணியை எப்படி கவனிப்பார்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலாகப் போய், “இந்த அதிகாரிகள் தவறான விவரங்களை வெளியிட்டால், அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்” என்றும் எச்சரிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார்.
செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 4 அதிகாரிகளும் அவரவர் சார்ந்திருக்கின்ற துறைகளின் சார்பாகவும், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய துறைகளின் சார்பாகவும் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தேவைப்படும் நேரத்தில் விவரங்களை அளிக்கும் வகையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். துறையின் செயலாளர்கள் அளிக்கும் விவரங்களை சரிபார்த்தபிறகே இந்த நால்வரும் அதனை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரிவிப்பார்கள் என்றும் அரசுத் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளை ஒரு கட்சியின் ஆட்சிக்கு ஊதுகுழலாக செயல்பட வைப்பதா என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. எந்த ஆட்சியாக இருந்தாலும் அது ஏதேனும் ஒரு கட்சியின் தலைமையிலான ஆட்சியாகத்தான் இந்திய ஜனநாயகத் தேர்தல் முறையின்படி அமைய முடியும். அதிகாரிகள் தரும் தகவல்கள் உண்மையாக இருக்கிறதா, ஆட்சியாளர்களைத் திருப்திபடுத்துவதற்கான உண்மைக்கு மாறான தகவல்களாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
அந்த வகையில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் அப்போது அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்ட அதிகாரிகளும், ஊடகங்களில் பேட்டி அளித்த அதிகாரிகளும் உண்மையைச் சொன்னார்களா, உண்மைக்கு மாறான தகவல்களைச் சொன்னார்களா என்பதை பொதுமக்கள் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் கட்சிக்காரர்களும் அறிவார்கள்.
தங்கள் கட்சியின் ஆட்சியில், கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைவராக இருந்தவர் பற்றியே அதிகாரிகள் மூலமாக உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பிய அனுபவத்தின் அடிப்படையில்தான் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இந்த நியமனம் குறித்து குற்றம்சாட்டுகிறார் போலும்.