
அகில இந்திய சுற்றலா அனுமதிச்சீட்டு பெற்றிருக்கும் ஆம்னி பேருந்துகள் பயணிகள் பேருந்துகள் போன்று செயல்படுகின்றன. இந்த பேருந்துகளை தமிழகத்தில் மறுமதி செய்யச்சொல்லி போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது.
மூன்று முறை அவகாசம் வழங்கியும் கூட 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் TN என்கிற வாகனப் பதிவெண்ணை பெறவேயில்லை. இதனால் தமிழகத்தில் உரிய அனுமதி சீட்டு மற்றும் பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வெளி மாநில பதிவுபெற்ற ஆம்னி பேருந்துகள் இன்று (14.06.2024) முதல் தமிழகத்தில் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. நேற்று இது சம்பந்தமாக போக்குவரத்து ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கால அவகாசம் வழங்க மறுக்கப்பட்டது.
பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து தொடர் விடுமுறை காரணமாக கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, போக்குவரத்து துறை ஆணையர் அவர்களும் அமைச்சர் அவர்களும் பரிசீலனை செய்து தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி வரும் (18.06.2024) செவ்வாய்க்கிழமை காலை வரை தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளனர்.
இதற்காக, போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளார் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் அ. அன்பழகன்.