
மராட்டிய மாநிலத்தின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று நவநிர்மான் சேனா. அதன் தலைவராக இருப்பவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் உறவினர். சொந்தக் காரணங்கள் மற்றும் உள்கட்சிப் பிரிச்சினைகளால் அவர் தனி அமைப்பை நடத்தி வருகிறார். மஹாராஷ்டிராவில் மராட்டிய மொழிக்கும், மராட்டிய மக்களுக்கும் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும். சிவசேனாவை பால்தாக்கரே தொடங்கியதும் இந்த அடிப்படையில்தான்.
மகாராஷ்ட்ராவின் மாநில மொழி என்கிற மராட்டியம் என்கிற போது அதுதானே முதன்மையாக இருக்கும்? இதற்கு எதற்கு ஓர் அமைப்பு என்று நினைக்கலாம். மகாராஷ்ட்ராவின் தலைநகரான மும்பை இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாகத் திகழ்கிறது. மகாராஷ்ட்ராவில் மற்றும் சில தொழில் நகரங்களும் உள்ளன. இந்த நகரங்களிலும் உட்புறங்களிலும் இந்தி மொழியே ஊடுருவி இருக்கிறது. மராட்டியத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டுவிட்டது. எடுத்துக்காட்டாக, கோலிவுட் என்று நாம் சொல்லும் கோடம்பாக்கம் பகுதி தமிழ் சினிமாவுக்கான இடம். அதுபோல பம்பாயை (மும்பை) பாலிவுட் என்று சொல்கிறார்கள். பாலிவுட் என்பது இந்திப் படங்களைத் தயாரிக்கும் களமாக இருக்கிறது. இந்தி நடிகர்கள், நடிகைகளைத்தான் இந்தியா முழுவதும் பாலிவுட் நட்சத்திரங்கள் என்கிறார்கள். அப்படியென்றால் மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மராட்டிய சினிமாக்களின் நிலை என்ன?
இந்தக் கேள்வியைத்தான் மராட்டிய அறிஞர்களும், கலைஞர்களும் நீண்டகாலமாக கேட்டு வருகிறார்கள். அரசியல் செல்வாக்கு இல்லாமல் இத்தகைய கோரிக்கைகள் பெரிய அளவில் கவனம் பெறுவதில்லை. சினிமா, கலை, வணிகம் என எல்லா நிலைகளிலும் மஹாராஷ்ட்ராவில் மராட்டிய மொழியை விழுங்கி, இந்தி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு தனியார் வணிக நிறுவனத்தில் பொருள் வாங்கச் சென்ற மராட்டியர் தனது தாய்மொழியில் பேசியபோது, பொருளை விற்பனை செய்த இந்திக்காரர், “இந்தியில் பேசு” என அதட்டியிருக்கிறார். அவருக்கு மராத்தி தெரியாது. மராத்திய மாநிலத்தில் மராத்தியில் பேசினால், இந்தியில் பேசு என்று அதட்டுவாயா என்று வாடிக்கையாளர் கேட்டிருக்கிறார். வார்த்தை தடித்து, அவரை அறைந்துவிட்டார்.
இதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, ‘மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாராத்திய மொழியை பேச மறுத்தால் அவர்களின் கன்னத்தில் அறையுங்கள். இந்தி ஆதிக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தியை தைரியமாக எதிர்க்கிறார்கள். கேரள மாநில மக்களும் இந்திக்கு இடம் தரவில்லை” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். கன்னத்தில் அறைவது என்பது வன்முறை. அதை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தி, மராத்தி மொழியின் கன்னத்தில் காலம் காலமாக அறைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
அதனால்தான் அண்மையில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், மராட்டிய மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் மராட்டிய மொழியைத்தான் முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன், அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர் கீபோர்டுகள் மராட்டிய மொழியில் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேகாலயா மாநிலத்திலும் பா.ஜ.க. ஆதரவுடனான கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.
அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து அதன்பின் தனி மாநிலமானது மேகாலயா. இதன் மாநில அரசு மொழி, ஆங்கிலம். அத்துடன் உள்ளூர் மொழிகளான காசி, கரோ ஆகியவை இணை மொழிகளாக உள்ளன. அந்த மாநிலத்தின் கவர்னர் ஒரு நிகழ்வில் பேசும்போது, மேகாலயா மக்கள் இந்தி மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று பேசியதற்கு அந்த மாநில அரசிடமிருந்து எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. “அசாம் மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துதான் மேகாலயா என்ற மாநிலம் உருவானது. எங்கள் உள்ளூர் மொழிகளைக் காத்திட இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் இந்திக்கு முக்கியத்துவம் தருவதை ஏற்க முடியாது” என கவர்னருக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
மராட்டியம் மேற்கில் உள்ளது. மேகாலயா வடகிழக்கில் உள்ளது. இரண்டு திசைகளிலும் இந்தியை முன்னிறுத்துவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் தெற்குத் திசைதான் இந்தி ஆதிக்கத்தின் விளைவால் தாய்மொழிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தங்கள் மொழிகளைத் தற்காத்துக்கொண்டிருக்கின்றன. அதிலும், தமிழ்நாடுதான் முதன்மையான மாநிலம். அதன் வழியை இன்று மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
f0fv2u