பிரதமர் மோடியின் 3.0 ஆட்சியின் நூறாவது நாளில் ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்ற திட்டத்துக்கான குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலமாக இந்திய நாடாளுமன்றம்- மாநில சட்டமன்றங்கள்- உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பதுதான் மோடி அரசின் திட்டம். இப்படி ஒரே தேர்தலாக நடத்துவதால் செலவு குறையும் என்பதும், பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படும் ராணுவ வீரர்களின் நேரம் நாட்டைப் பாதுகாப்பதற்கானப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று பா.ஜ.க. அரசும் அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலத்திலுத் தனித்தனியாகத் தேர்தல் நடத்தும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் முன்னிறுத்துகிறார்கள்.
இந்தக் காரணங்களால் மாநில அரசுகளின் ஐந்தாண்டு பதவிக்காலத்திற்கு கழுத்தில் கத்தி வைக்கப்படுகிறதே தவிர, மத்திய அரசின் பதவிக்காலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதிலிருந்தே இது மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயல் என்பது அம்பலமாகிவிடுகிறது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலையும் அந்தந்த மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலையும் ஒரே தேர்தலாக நடத்தினாலும் ஒரே கட்டமாக நடத்தப்போவதில்லை. 6 கட்டம், 8 கட்டம் என நடைபெறும்போது செலவும், பாதுகாப்புப் பணியும் ஏறத்தாழ அதே அளவில்தான் இருக்கப்போகின்றன. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகைகளை ஒப்பிடும்போது, தேர்தல் நடத்துவதற்கான செலவு என்பது மிகவும் குறைவு. எனவே, மாநிலங்கள் மீதான தாக்குதலாகவே ‘ஒரே நாடு-ஒரே தேர்தல் ’ என்பதன் நோக்கம் அமையும்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரே நாடு என்று சொல்வதைவிட, ஒரு கூட்டாட்சியின் கீழ் உள்ள பல்வேறு இன-மொழி-பண்பாடுகளைக் கொண்ட மக்களின் தொகுப்பு என்பதே சரியாகும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அதனடிப்படையில்தான் கவுன்சிலர்கள் முதல் எம்.பி.க்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரே தேர்தல் என்றால் எம்.பி.க்கு இருக்கும் முக்கியத்துவம், கவுன்சிலருக்கும் சேர்த்து வாக்களிக்கும்போது இருக்காது.
தமிழ்நாட்டில் கடைசியாக 1984, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடந்தன. இந்த மூன்று தேர்தல்களிலும் ஒரே கூட்டணிதான் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிக இடங்களைப் பிடித்தன. 1991ல் ராஜீவ்காந்தி படுகொலை காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணியே சட்டமன்றத்திலும் மிருகபல மெஜாரிட்டியுடன் வென்றதால் ஜெயலலிதா தலைமையிலான அரசு முதன்முதலாக அமைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. 1996 தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான அலை கடுமையாக வீசியதால் சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பிடித்த தி.மு.க-த.மா.கா கூட்டணியே நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்றது. அதனால் மத்திய ஆட்சியிலும் பங்கேற்றது.
அதே நேரத்தில், 1980ல் நாடாளுமன்றத் தேர்தலும், அதன்பின் தனியாக சட்டமன்றத் தேர்தலும் நடந்தபோது, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 6 மாத இடைவெளியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோலவே, 1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதே ஆண்டு நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 1984ல் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெற்றபோது இரண்டிலும் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர், 1986ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வென்றது.
இதன் மூலம் பொதுமக்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் அளித்து வாக்களிப்பதையும், ஒன்றாகத் தேர்தல் நடத்தும்போது, ஒரு பக்கமாகவே முடிவுகள் அமைவதையும் உணரலாம். வளர்ந்த நாடான அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் தனியாகவும், மாநிலங்களுக்கான தேர்தல் தனியாகவும் நடைபெறுகிறது. இந்தியா ஒரு வளரும் நாடு. அதன் ஜனநாயகப் பாதை வலிமையானது. உள்ளாட்சிகளையும் மாநிலங்களையும் ஜனநாயக முறையில் வலிமைப்படுத்தாமல், மத்திய அரசை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவது கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும்.