கோடை சீசனை முன்னிட்டு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக சுற்றுலாப் பேருந்து சேவையை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கொடி அசைத்து வைத்து இன்று தொடங்கி வைத்தார்.
அதிமுக ஆட்சி காலத்தை விட திமுக ஆட்சி காலத்தில் தான் நீலகிரி மாவட்டத்தில் அதிக பேருந்துகள் இயக்கபட்டு வருவதாகவும், மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் கா.ராமசந்திரன் கூறியுள்ளார்.
மலைகளின் அரசி அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், இன்று முதல் சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா இடங்கள் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடங்களாக இருந்து வருகிறது.
உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கா ராமச்சந்திரன், மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார்.
முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது.
இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது.
இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாயும், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.