
தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்துள்ளது என்று பாராட்டுக்களை குவித்து வருகிறது ‘ஆபரேஷன் சிந்தூர்’.
பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது பாகிஸ்தான் என்ற குற்றச்சாட்டினை மேலும் உறுதிப்படுத்தியது பஹல்காம் அட்டாக். இதற்கு பதிலடி கொடுக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ஐ கையில் எடுத்தது இந்திய ராணுவம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருப்பதால் ஒரு பக்கம் போர்க்கால ஒத்திகைக்கான முன்னேற்பாடுகளை கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது இந்திய ராணுவம்.
நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் மணியளவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியது ராணுவம். பஹல்காமில் தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பாவின் மூன்று முகாம்கள், ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் நான்கு முகாம்கள், ஹிஸ்புல் முஜாகிதினின் இரண்டு முகாம்கள் என்று பயங்கரவாதிகளில் 9 முகாம்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடந்தது. பிரான்ஸில் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தி உள்ளது இந்தியா.

இந்த 9 முகாம்களும் இந்தியாவுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன. தற்கொலைப்படை தளங்களும், முக்கிய பயிற்சி தளங்களும் இந்த 9 முகாம்களில் இருந்தன என்று கூறுகிறது இந்திய உளவுத்துறை.
பகவல்பூர் மற்றும் முரிட்கேவில் நடத்திய தாக்குதலில் மட்டும் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்.
புல்வாமா அட்டாக் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பகவல்பூர் முகாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளது. மும்பை அட்டாக்கில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாமும் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளது.
பஹவல்பூரில் நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதி மசூர் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆபரேஷன் சிந்தூர் அட்டாக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ‘’ஜம்மு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு தாத்குதல் நடந்தது. பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். இந்த தாக்குதால் நாடு முழுவதும் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்தக்குழு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையது. இதன் மூலம்தான் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள் நிரூபிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது பாகிஸ்தான். இதையடுத்தே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன’’ என்கிறார்.
’’நம்பகமான உளவுத்துறையின் தகவல்கள் அடிப்படையிலேயே 9 பயங்கரவாதிகள் முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன’’ என்கிறார் கர்னல் சோபியா குரேஷி.

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் குடும்பத்தினரின் கண் முன்னே நெற்றியில் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்தே திருமணமான பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஐ நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலியாகி இருக்கலாம் என்று தகவல்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் குழு. ஆனால், இந்திய ராணுவமோ பயங்கரவாதிகளின் முகாம்களையே குறி வைத்து தாக்கி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை இல்லை என்ற கருத்து நிலவுகிறது.