நாடாளுமன்றத்தில் மக்களவை எனப்படும் லோக்சபாவை நடத்தக்கூடிய தலைவர் சபாநாயகர். மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவை நடத்தக்கூடிய தலைவர் துணை ஜனாதிபதியாவார். சபாநாயகர்களாக இருந்தாலும், துணை ஜனாதிபதிகளாக இருந்தாலும் அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுடன்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் ஆளுங்கட்சி அல்லது அதன் கூட்டணியின் வலிமையின் அடிப்படையிலேயே இவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனினும், அவையை நடத்தும் பொறுப்பு என்று வரும்போது பாரபட்சமில்லாமல் அவையை நடத்தவேண்டும் என்பதே நாடாளுமன்ற மரபாகும்.
கே.ஆர்.நாராயணன், கிருஷ்ணகாந்த், பைரோன்சிங் ஷெகாவத், ஹமித் அன்சாரி உள்ளிட்ட துணை ஜனாதிபதிகள் மாநிலங்களவையை நடத்தியிருக்கிறார்கள். இவர்களில் காங்கிரஸ் ஆதரவில் துணை ஜனாதிபதிகளானவர்களும் உண்டு, பா.ஜ.க. ஆதரவில் பதவிக்கு வந்தவர்களும் உண்டு. பா.ஜ.க.வின் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான வெங்கைய நாயுடுவும் துணை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். அவரவர் கட்சி சார்ந்த பார்வையை துணை ஜனாதிபதிகளால் முற்று முழுதாக மாற்றிவிட முடியாது என்றாலும், இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பையும் மாண்பையும் கருதி, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உள்ளிட்ட இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலேயே அவையை நடத்துவது அவர்களின் மரபாக இருந்தது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான வெங்கையா நாயுடு, உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21 அன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் முன் அனுமதியின்றிப் பேசுவதற்கு ஒப்புதல் அளித்தார். அப்போது உடனடி மொழிபெயர்ப்புக்கானத் தொழில்நுட்பம் இந்தளவுக்கு இல்லாதபோதும், அவர் அந்த வாய்ப்பை வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் உள்பட பலரும் அவரவர் தாய்மொழியில் பேசினர். இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு கிடையாது. அதுபோலவே ஹமித் அன்சாரி துணை ஜனாதிபதியாக இருந்தபோது மாநிலங்களவையை பாரபட்சமின்றி நடத்தியிருக்கிறார். அவருடைய அணுகுமுறையை எதிர்க்கட்சியினரும் பாராட்டியுள்ளனர்.
மக்களவை என்பது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அவை என்றாலும், மாநிலங்களவைக்கே மேல்சபை என்ற பெயர் உண்டு. சான்றோர்கள் அவை என்று பெயர் பெற்ற அந்த அவையின் தலைவராகத் தற்போதுள்ள துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரின் அணுகுமுறை ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்.பிக்களையும் வெடிப்புறச் செய்து, துணை ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடிய அளவுக்கு சூழலை உருவாக்கியுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், துணை ஜனாதிபதிதான் அத்தகைய சூழலை உருவாக்கியிருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஊதுகுழல் போலவே அவர் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதுடன், எதிர்க்கட்சியினரை நோக்கி கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவில் தொடங்கி திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, சமாஜ்வாடி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களை துணை ஜனாதிபதி விமர்சிக்கின்ற விதமும் அவர் பயன்படுத்தக்கூடிய சொற்களும் கடும் எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கின்றன.
தி.மு.கவின் மாநிலங்களவைக் குழுத் தலைவரான திருச்சி சிவா எம்.பி. மிகவும் பண்பான முறையில், “இந்த அவையின் கண்ணியத்தைக் காக்கின்ற வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பாரபட்சமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்பதை துணை ஜனாதிபதி முன்பாகவே எடுத்துரைத்தோம் பயனில்லை. துணை ஜனாதிபதியின் மனநிலைக்கேற்ப அவைக் காவலர்களில் தொடங்கி அலுவலர்கள் வரை மாநிலங்களவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நடந்துகொள்கிற விதம் குறித்தும் அவையில் சுட்டிக்காட்டப்பட்டும் நடவடிக்கை இல்லை.
இனி பொறுப்பதில்லை என முடிவுக்கு வந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், துணை ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான கடிதத்தை அளித்துள்ளனர். அரசியல் சட்டப் பிரிவு 67(பி)யின்படி, 14 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் கொடுத்து, ராஜ்யசபாவில் முழுப் பெரும்பான்மை ஆதரவுடனும், லோக்சபாவில் பெரும்பான்மை ஆதரவுடனும் துணை ஜனாதிபதியை நீக்க முடியும். தற்போதைய சூழலில் அப்படிப்பட்ட நீக்கத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதைவிட, இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக ஒரு துணை ஜனாதிபதி மீது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்து அவரை நீக்கக் கோருகின்றன. மக்களவையில் உள்ள எம்.பி.க்களும் இதனை வலியுறுத்தி குரல் கொடுத்துள்ளனர்.
கண்ணியம் மிகுந்த மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர் பொறுப்பில் உள்ள துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்லிக் கொள்வதிலும், அதன் வழியாகத்தான் அரசியலுக்கு வந்தேன் என்று சொல்வதையும் பெருமையாக நினைப்பவர். தனிப்பட்ட முறையில் இது அவருக்கு பெருமையாக இருக்கலாம். இருப்பதாக நினைக்கலாம். ஆனால், நாடாளுமன்ற மரபுக்கும், ஜனநாயகத்தின் விழுமியத்திற்கும் இழிவையே அது உண்டாக்கும். பா.ஜ.க.வில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களில் யார்தான் ஜனநாயகத்தின் விழுமியம் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள்?