
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய வைத்ததும், ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி என்று அதிமுகவை மூன்றாக உடைத்ததும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்தான் என்கின்றனர்.
பாஜக வழிகாட்டியபடிதான் சென்றிருக்கிறார் ஓபிஎஸ். ஆனாலும் பழனிசாமியின் பிடிவாதத்தால், அவர் நிபந்தனையினால் ஓபிஎஸ்சை முழுமையாக கைவிட்டு விட்டது பாஜக.

கடைசி முயற்சியாக அமித்ஷா, மோடியை நேரில் சந்தித்து சரி செய்துவிடலாம் என்று முயற்சித்துப் பார்த்தும் ஓபிஎஸ்க்கு தோல்விதான் மிஞ்சியிருக்கிறது. அமித்ஷா, மோடி இருவருமே ஓபிஎஸ்சை சந்திக்கவில்லை.
இதற்கு மேலும் பாஜக காவடி தூக்கிக் கொண்டிருந்தால் தன்னைச் சுற்றி இருப்பவர்களை சமாளிக்க முடியாது என்று பாஜக மத்திய அரசுக்கு கண்டன அம்பை எய்திருக்கிறார் ஓபிஎஸ்.
‘’தமிழ்நாட்டிற்கு கல்வி வழங்காததால் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிதி வழங்காத மத்திய அர்சின் செயல் கல்வி உரிமை சட்டத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும் அ ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்கு உரியது’’ என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் மோடியை சந்திக்கவும் வழியனுப்பவும் வாய்ப்பு கிடைத்தால் அது தனி மரியாதை என்றும், பாக்கியம் என்றும் சொன்ன ஓபிஎஸ், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் மோடி புராணத்தை நிறுத்திவிட்டார்.
பாஜக தன்னை முழுமையாக கை கழுவி விடுகிறது என்பதை முன்பே உணர்ந்துதான் மதுரையில் மாநாடு நடத்த ஆயத்தமானார் ஓபிஎஸ். இந்த மாநாட்டில் தனிக்கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் ஓபிஎஸ்.
இதற்கிடையில் நாளை தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ். நாளையே தனிக்கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது ஓபிஎஸ் வட்டாரம்.

தனிக்கட்சி தொடங்கிய பின்னர் தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்பது ஓபிஎஸ் வட்டாரத்தின் முடிவாக இருக்கிறது. அதனால்தான், ’’கட்சி தொடங்கிய பின் இன்று வரையிலும் விஜய் நன்றாகத்தான் செயல்படுகிறார். அவருக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு’’என்கிறார் ஓபிஎஸ்.
’’2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி. விஜய் – ஓபிஎஸ் இணைந்தால் அரசியலை நடத்த முடியும். தென் மாவட்டங்களில் நல்ல பலம் இருக்கும்’’ என்கிறார் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்.