இதை பலமுறை சொல்லிவிட்டேன். 50 முறைக்கு மேல் சொல்லிவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ, ‘’தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்று சிரிக்கிறார்.

முதன் முதலில் அமித்ஷாவோடு சோழா ஓட்டலில் கூட்டணி ஒப்பந்தம் செய்தபோதே அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று சொல்லிவிட்டார் அமித்ஷா. அதை இப்போது வரையிலும் கடைபிடித்து வருகிறார் என்று பழனிசாமி சொல்வதைப் பார்த்தால் பன்னீர்செல்வம் விவகாரத்தில் பாஜக டெல்லி மேலிடம் தலையிடாது என்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுவிட்டனர். இலையுதிர் காலம் போய் இப்போது பன்னீர்செல்வம் அணி கிளையுதிர்காலத்தில் இருக்கிறது.
இப்போதும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்று எந்த தைரியத்தில் சொல்கிறார் பன்னீர்செல்வம்?
