ஒரு பில்லியன் டாலர் மோசடியில் இந்திய -அமெரிக்க தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு 7.5 ஆண்டுகள், அதாவது 90 மாதங்கள் சிறை தண்டனை அளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரிஷி ஷா(38). இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன். சிகாகோவின் புறநகர்ப்பகுதியான ஓக் புரூக்கில் வளந்தவர். இவரும் சாரதாவும் இணைந்து கடந்த 2006ல் அமெரிக்காவின் சிகாகோவில் ’கான்டெக்ஸ்ட் மீடியா’எனும் நிறுவனத்தை தொடங்கினார்கள். பின்னர் அசெண்ட் ஹெல்த் நிறுவனத்தை வாங்கி, அதை 2016ல் ‘அவுட்கம் ஹெல்த்’ எனும் நிறுவனமாக மாற்றினர்.
அவுட்கம் ஹெல்த் நிறுவனம் அமெரிக்க மருத்துவமனைகள், மருத்துவர்களின் அறைகளில் சுகாதார விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம்.
மருத்துவ நிறுவனங்களின் ஆதரவைப்பெற்று அவுட்கம் ஹெல்த் வ் வளர்ந்தது. இதனால் கடந்த 2017ம் ஆண்டில் இவர்கள் பில்லியனர்கள் பட்டியலில் இணைந்தனர். 2018ல் இந்த நிறுவனத்தின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். அன்றைய நிலவரத்தின்படி ரிஷி ஷாவின் சொத்து மதிப்பு 3.9 பில்லியன் டாலர்கள் ஆக இருந்தது. சாரதாவின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராக இருந்தது.
திடீரென்று 2017ம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து கோல்ட்மேன் சாக்ஸ், ஆல்பாபெட் போன்ற முதலீட்டாளர்கள் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் மீது மோசடி வழக்குக் பதிவு செய்தனர். அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. 12க்கும் மேற்பட்ட மோசடி, பண மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கினார் ரிஷி ஷா.
கடந்த 2023ல் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பிராட் பர்டி, ஷ்ரதா அகர்வால் மீதும் குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் மீதும் விசாரணை நடந்து வந்தது.
வழக்கின் விசாரணையில், விளம்பரம் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலம் ஒரு பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 8,300 கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானதால் ரிஷி ஷாவுக்கு 7.5 ஆண்டுகள், அதாவது 90 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். பிராட் பர்டிக்கு 2 .3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறைவான டெலிவரிகள் செய்தபோதிலும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான டெலிவரி செய்தது போன்று இன்ஸ்வாய்ஸ் பதிவு செய்த மோசடி கண்டறியப்பட்டதும், வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள், முதலீட்டாளர்கள், தணிக்கை நிறுவனத்திற்கு பொய்களை சொல்லி ஏமாற்றியதால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் வாதிட்டதை அடுத்து நீதிமன்றம் 7.5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறது.