
கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். இது நியாயமா? அரசு பணத்தில் கல்லூரி கட்டக்கூடாதா? கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவை மக்கள் சதி செயலாக பார்க்கிறார்கள். ஒரு மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ அப்படித்தான் நாட்டுக்கு கல்வியும் முக்கியம். ஆனால், அதை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கோவை சுற்றுப் பயணத்தின் போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது பெரும் சர்ச்சையானது.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறார் பழனிசாமி என்று கடும் கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், விக்கிரவாண்டி சுற்று பயணத்தின் போது, ‘’இந்து சமய அறநிலையத்துறையின் நிதியில் இருந்து கல்லூரி கட்டுவதாக சொன்னார்கள். மாணவர்களுக்கு கல்லூரி அவசியம். ஆனால், அறநிலையத்துறை நிதியில் கல்லூரி அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்காது என்பதை மனதில் வைத்துதான், மாணவர்களின் நலன் கருதி அரசு கலைக்கல்லூரிகள் நிர்வாகத்தில் கொண்டு வரவேண்டும் என்று சொன்னால் நான் சொன்னதற்கு கண்ணு காது மூக்கு வச்சு விவாதம் நடக்குது’’ என்று சொல்லி எதிர்ப்புகளை சமாளிக்க நினைத்தார்.

இந்நிலையில் நேற்று கும்பகோணம் சுற்றுப்பயணத்தில் பேசிய பழனிசாமி, ‘’மீண்டும் அதிமுக மலரும். கோயில் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு அந்த வீட்டுமனை அவர்களுக்கே சொந்தமாகும் நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கோயில் பணத்தில் கல்லூரி கட்டக்கூடாது என்று சொன்ன பழனிசாமி இப்போது கோயில் நிலத்தை குடியிருப்போருக்கு சொந்தமாக்குவேன் என்கிறாரே என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. கோயில் விவகாரத்தில் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்தே அவர் இப்படி அந்தர்பல்டி அடித்திருக்கிறார் என்கிறார்கள்.