காசாவில் நேற்று (பிப்ரவரி 29) நிவாரண உதவிபெற வரிசையில் காத்திருந்த பாலஸ்தீனர்கள் 100க்கும் மேற்பட்டோரை இஸ்ரேலிய ராணுவப் படையினர் சுட்டுக்கொன்ற அதிர்ச்சிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கண்மூடித்தனமானத் தாக்குதலில் ஏறத்தாழ 112 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும், மேலும் 280-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் ஒப்பிடும்போது பொதுமக்கள் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்த சம்பவமாக இதுக் கருதப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனகள் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இந்த குற்றத்தை ஏற்க மறுத்துள்ளது.
போர் நிறுத்தம், இஸ்ரேலிய பணையக் கைதிகளை விடுவித்தல் ஆகிய சமாதானப் பேச்சுவார்த்தை அம்சங்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கக்கூடும் என்று ஹமாஸ் தரப்பு எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனர்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என ஐநா சர்வதேச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த இனப்படுகொலை வழக்கை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்த சர்வதேச நீதிமன்றம், பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்காத இஸ்ரேல், காசாவில் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த சூழலில், நேற்று நடத்த இஸ்ரேலிய ராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் மாக்ரான், இஸ்ரேலுக்கு எதிராக மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நிவாரணம் பெற காத்திருந்த பாலஸ்தீனிய குடிமக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்குக் கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிடுவதாக இருந்ததை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.
போர் தொடங்கி கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பலி எண்ணிக்கை 30,000ஐத் தாண்டிவிட்டதாக பாலஸ்தீனச் சுகாதார அதிகாரிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.