உலக அரசியலில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் குறித்து உலகளவில் நடைபெற்று வரும் விவாதத்தின் ஒரு பகுதியாக, செவ்வாய்கிழமை (டிசம்பர் 3) இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. “பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு” என்ற தலைப்பில் செனிகல் நாட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.
வரலாற்று ரீதியாக பாலஸ்தீன நாட்டின் இறையாண்மையை ஆதரித்து வரும் இந்தியா, சமீபகாலமாக இஸ்ரேல் உடன் பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரும் பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் பதிவு செய்திருக்கிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், உள்ளிட்ட 157 நாடுகள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன.
இஸ்ரேல், அமெரிக்கா, மைக்ரோனேஷியா, நவ்ரு, பலாவ், பப்புவா நியூ கினியா, அர்ஜென்டினா மற்றும் ஹங்கேரி ஆகிய 8 நாடுகள் மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
கேமரூன், செக் குடியரசு, ஈக்வடார், ஜார்ஜியா, பராகுவே, உக்ரைன் மற்றும் உருகுவே உட்பட 7 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பாலஸ்தீனப் பிரச்சினையில் தனது நீண்டகால நிலைப்பாட்டையும், சமரச தீர்வை அடைவதற்கான நிலையான ஆதரவையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அமெரிக்கா போன்ற சில நாடுகள் தீவிரமாக ஆதரித்து வருவதால், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பிளவுபட்டுள்ளது.
சிரியாவின் கோலான் குன்றுகள்
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரியாவின் கோலன் குன்றுகளிலிருந்து திரும்பப் பெறக் கோரும் ஐநா தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்துள்ளது.
கடந்த 1967-ம் ஆண்டு முதல் சிரியாவின் கோலான் குன்றுகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், அங்கு செய்து வரும் பல கட்டுமான நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்பதை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறிய நிலையில், 64 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்ட்ரேலியா உட்பட 8 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.