தமிழ்நாட்டின் முந்திரி தலைநகரான பண்ருட்டியில் ஆண்டுக்கு 1.5 லட்சம் டன்கள் வரை முந்திரி பருப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ருட்டியில் மட்டும் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
பண்ருட்டி சுற்றுவட்டார கிராமங்களான சாத்திப்பட்டு, மாம்பட்டு, விசூர், பணிக்கங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 32 ஏற்றுமதி சார்ந்த முந்திரி உற்பத்தி அலகுகள்(Production Units), 250 செயலாக்க அலகுகள்(Processing Units) மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், இந்தாண்டு கொளுத்திய கோடை வெயில் காரணமாக முந்திரி பூக்கள் கருகியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதன் எதிரொலியால், முந்திரி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டில் விளைச்சல் இல்லாததாலும் முந்திரி கொட்டைகள் இருப்பு இல்லாத காரணத்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டு முன் எப்போதும் இல்லாத வகையில் பண்ருட்டியில் முந்திரி விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
விளைச்சல் குறைந்ததால் வழக்கமாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்று வந்த ஒரு மூட்டை(80 கிலோ) முந்திரி கொட்டைகள் தற்போது 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
முந்திரி கொட்டை விலை ஏற்றத்தால், பண்ருட்டி குடிசைத் தொழில் வியாபாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து முந்திரி கொட்டைகளை வாங்கும் குடிசைத் தொழில் வியாபாரிகள், சுத்தம் செய்து முந்திரி பயிர்களாகவும் அதை தரம் பிரித்து விற்பனையில் ஈடுபடுவதில் உரிய விலை கிடைக்காததால் பாதிப்படைந்துள்ளனர்.
முந்திரி விளைச்சல் இல்லாததால், ஆண்டாண்டு காலமாக வாழ்வாதாரமாக கருதி உழைத்து வரும் விவசாயிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி முந்திரி விலை
பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் உற்பத்தியாகும் முந்திரி பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளை விட தரத்திலும் சுவையிலும் சிறந்தவை. வெளிநாட்டு முந்திரி பருப்பை விட பண்ருட்டி முந்திரிக்கு எப்போதும் தேவை அதிகம்.
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பெரும்பாலும் உள்ளூர் குடிசைத் தொழில் வியாபாரிகள் முந்திரி கொட்டைகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
இந்த சூழலில், பண்ருட்டி முந்திரி பருப்புகளின் நேரடி கொள்முதல் விலை கடுமையாக உயர்வை சந்தித்துள்ளது.
முதல் தர முந்திரியான ‘180 கிரேடு’ விலை 900 முதல் 1,000 ரூபாய்க்கும்,
‘420 கிரேடு’ விலை 800 முதல் 900 ரூபாய்க்கும்,
‘320 கிரேடு’ விலை 700 முதல் 800 ரூபாய்க்கும்,
டபுள் பீஸ் 700 ரூபாய்க்கும்,
ஃபோர் பீஸ் 600 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
நேரடி கொள்முதல் விலை கடுமையான விலை சந்தித்துள்ள நுழையில், சந்தை விலையும் கடுமையான உயர்வை எட்டியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தங்களின் நிலையை கருத்தில்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் குடிசைத் தொழில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.