
மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குவதால் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. என்னென்ன பிரச்சினைகளை முன்னெடுத்துப் பேசுவது என்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கமாகும். இரண்டு முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தன.
முதலாவது பிரச்சினை-ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான பாகிஸ்தான் மீதான ராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டதும் அது நிறுத்தப்பட்டதும் ஏன் என்பதற்கான நேர்மையான-முழுமையான விளக்கம் வேண்டும் என்பதுதான். காஷ்மீர் பெஹல்காம் சுற்றுலாப் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதல்கள் வெளிப்பட்ட நிலையில், இரு நாடுகளிடமும் பேசி போரை நிறுத்திவிட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் அறிவிப்பை இந்தியா மறுப்பதும், டிரம்ப் மீண்டும் மீண்டும் பல முறை அதையே சொல்வதுமாக ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்கள், தீவிரவாதிகள் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், பாகிஸ்தானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. எனினும், பெஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் என இந்தியத் தரப்பில் வெளியிடப்பட்ட படங்களில் இருந்த நபர்கள் உள்ளிட்ட அந்த தீவிரவாதிகள் பிடிபட்டார்களா? கொல்லப்பட்டார்களா? அவர்களின் செயல்பாடு என்னவானது? என்பன பற்றி மத்திய அரசு இதுவரை எந்த தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.
அரசியலில் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வப்போது பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க அரசுக்கு வழக்கமாக உள்ள நிலையில், அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்படுமளவுக்கு ஒரு சுற்றுலாத்தலம் போதிய பாதுகாப்பின்றி இருந்தது ஏன் என்பது பற்றியோ, அப்பாவிகளை அநியாமாக சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் கதி என்ன என்பது பற்றியோ பா.ஜ.க. வாய் திறக்கவில்லை. இதைத்தான் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, “நாடாளுமன்ற விதிமுறைகளுக்குட்பட்டே இது குறித்து விவாதிக்கப்படும். பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணம் இல்லாத நாட்களில் நாடாளுமன்றத்தில் பேசுவார். ஆனால், எல்லாவற்றுக்கும் அவர் நாடாளுமன்றத்தில் பேச வேணடும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இடம்பெற வேண்டிய இரண்டாவது அம்சம், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் நீக்கம் நடவடிக்கையாகும். ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்றும், பிறப்புச் சான்றிதழ்-வாழ்விடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் உள்ளிட்டோரின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், ஏறத்தாழ 2 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, ஆளும் பா.ஜ.க.கூட்டணிக்கு சாதகமான நிலை உருவாக்கப்படும் என்பதுதான் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு. உச்சநீதிமன்றமும் தேர்தல் நெருக்கத்தில் ஏன் இந்த நடவடிக்கை என்று கேட்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள பட்டியல் இன மக்களில் 27.4% பேர் தேர்தல் ஆணையயத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளனர். நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க.கூட்டணி ஆட்சியில் பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், இந்தத் தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்டம்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என 58% தலித் வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் வாக்குகளும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளும் நீக்கப்பட்டால், எதிர்ப்புணர்வு வாக்குகள் குறைந்து ஆளுந்தரப்புக்கு சாதகமான சூழல் அமையும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தற்போது பீகாரில் முன்னெடுக்கப்படும் இதே அளவுகோலுடன் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமையும் என்ற எச்சரிக்கையை எதிர்க்கட்சிகள் விடுக்கின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. விதிகளுக்குட்பட்டுத்தான் விவாதிப்போம் என்கிறது ஆளுங்கட்சியான பா.ஜ.க.
இதுதான் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலை.