பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கம் (IMA) தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்தது.
குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை, பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக IMA குற்றஞ்சாட்டி வந்தது.
நவீன மருத்துவமான அலோபதிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியது.
இந்த சூழலில் இன்று(பிப்ரவரி 27) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பதஞ்சலி விளம்பரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அரசு கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்துகொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியாது.
நாடு முழுவதும் இதுபோன்ற விளம்பரங்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
“இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அரசாங்கம் சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தவறான தகவல்களைக் கொடுத்து வரும் அனைத்து பதஞ்சலி விளம்பரங்களையும் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகளைப் பற்றிய விளம்பரங்களில் “தவறான” கூற்றுக்கள் வெளியிடப்படுவதாக உச்ச நீதிமன்றம் எச்சரித்து இருந்தது.