
பொதுக்குழுவில் ஆரம்பித்து மாநாட்டு மேடை வரைக்கும் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் நாற்காலிச் சண்டை நடக்கிறது. இந்த நாற்காலி இவர்களுக்கு அல்ல; முகுந்தன் பரசுராமனுக்குத்தான்.
இத்தனைக்கும் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமன். அன்புமணிக்கு உடன்பிறந்த அக்கா மகன். ஆனாலும், கட்சிக்குள் அக்கா மகனின் வருகையை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை அன்புமணி. பேரன் மேல் உள்ள பிரியத்தில் முகுந்தனை கட்சிக்குள் கொண்டு வர துடித்தார் ராமதாஸ். 24.3.2024இல் முகுந்தனை பாமக மாநில சமூக ஊடகப் பேரவையின் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். முகுந்தனின் இந்த நியமனத்தை விரும்பாதவராக இருந்தார் அன்புமணி.
தந்தையின் விருப்பம் இதில் உள்ளதால் அந்த நியமனத்திற்கு அவ்வளவாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அன்புமணி.

ஆனால், 28.12.2024இல் நடந்த பொதுக்குழுவில், ‘’அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணித் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன் என்று ராமதாஸ், மேடையிலேயே எதிர்ப்பை காட்டினார் அன்புமணி. ‘’அவன் கட்சிக்குள் வந்தே நாலு மாசம்தான் ஆகுது. அதற்குள் இளைஞரணி தலைவர் பதவியா?’’ என்று அன்புமணி பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட ராமதாஸ், ‘’இது என் கட்சி. நான் சொல்லுறதைத்தான் கேட்கணும். நான் சொல்லுறத கேட்க முடியலேன்னா யாரும் கட்சியில இருக்க முடியாது’’ என்று சொல்லிவிட்டு, ’’நான் அறிவிச்சது அறிவிச்சதுதான்’’ என்று முகுந்தனின் நியமனத்தை ராமதாஸ் உறுதிப்படுத்த, ஆத்திரத்தில் மைக்கை தூக்கி வீசினார் அன்புமணி.

பொதுக்குழுவிலேயே இப்படி சண்டை என்றால் வீட்டில் என்னென்ன பிரச்சனைகள் நடந்திருக்கும்? அதுபற்றி எல்லாம் பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது.
பொதுக்குழுவில் நடந்த சண்டைக்கு பிறகு ராமதாசும் அன்புமணியும் பிரிந்து அன்புமணி தனிக்கட்சி தொடங்கப்போவதாக தகவல் பரவியது. தன்னால் கட்சிக்குள் கலகம் வேண்டாம் என்று தானே கட்சியை விட்டு விலகுவதாகச் சொன்னார் முகுந்தன்.
பின்னர் அன்புமணியை பனையூர் அலுவலகத்தில் சென்று சந்தித்து பேசினார் முகுந்தன். இதனால் அன்புமணியும் முகுந்தனும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்றும், பிரச்சனை தொடர்கிறது என்றும் மாறி மாறி செய்திகள் வந்தன.
இந்நிலையில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் மீண்டும் முகுந்தன் விவகாரம் விஷ்வரூபம் எடுத்திருக்கிறது.

மாநாட்டுக்கு வந்திருந்த ராமதாசும் அன்புமணியும் வேறு வேறு ஓட்டல்களில் தங்கி இருந்தனர். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோரை தான் தங்கியிருந்த கால்டன் சமுத்திரா ஓட்டல் அறைக்கு வரவழைத்திருக்கிறார் ராமதாஸ்.
என்ன விசயம்? என்று எல்லோரும் கேட்க, ‘’முகுந்தனுக்கு மேடையில் நாற்காலி போடுங்க’’ என்று ராமதாஸ் சொன்னதும் தான் போதும், ‘’அது முடியாது’’ என்று பொங்கி வெடித்திருக்கிறார் அன்புமணி.
உடனே ராமதாஸ், ‘’முகுந்தனுக்கு மேடையில் நாற்காலி போடாக்கூடாது என்று சொன்னால், அன்புமணியை யாரும் தலைவர்னு சொல்லக்கூடாது’’ என்று உத்தரவு போட்டிருக்கிறார்.
அதை மறுத்தால் பிடிவாதமாக ராமதாஸ் மேடையில் முகுந்தனுக்கு நாற்காலி போட்டுவிடுவார் என்று அந்த ‘டீலிங்’குக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் அன்புமணி. அதன்படியே மாநாட்டு மேடையில் அன்புமணியை யாரும் தலைவர் என்று சொல்லவில்லையாம்.