சனாதன தர்மத்தை காக்க வேண்டும் என்று தனது ஜனசேனா கட்சியில் ‘நரசிம்ம வாராஹி படை’ எனும் புதிய அணியை உருவாக்கி இருக்கிறார் பவன் கல்யாண்.
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாஜக கூட்டணியில் வென்று ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஆனதில் இருந்து சனாதன தர்மம் குறித்து அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
அதிலும், திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டினை முன் வைத்து எழுந்த விமர்சனங்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தேசிய அளவில் ஏன் அச்சத்தை ஏற்படுத்துகிறீர்கள்? என்று கேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கோபம் கொண்டு, ‘’இந்து தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சனாதன தர்மத்தை மீறுகின்றபோது அதுகுறித்து பேசுவது கூட தவறு என்று சொன்னால் எப்படி? இதே தவறு மற்ற மத வழிபாட்டு தலங்களில் நடந்தாலும் இப்படித்தான் பேசுவாரா பிரகாஷ்ராஜ்?’’என்று வெடித்தார்.
தான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டுவிட்டார் பவன் கல்யாண் என்று பிரகாஷ்ராஜ் அளித்த விளக்கத்தை பவன் ஏற்கவில்லை. இதனாலேயே பிரகாஷ்ராஜ்க்கு தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் பறிபோய்விட்டன என்ற தகவலும் பரவி வருகிறது.
பிரகாஷ்ராஜ் லட்டு குறித்து கருத்து சொன்ன அதே நேரத்தில், ஆந்திராவில் தான் நடித்த மெய்யழகன் படத்தின் விழாவில் பங்கேற்றிருந்தார் நடிகர் கார்த்தி. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி கார்த்தியை வம்பில் மாட்டிவிடும் நோக்கில், லட்டுவை பற்றி கிண்டலடித்து கேள்வி கேட்க, லட்டு விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்திருந்த கார்த்தி அதுகுறித்து பேச மறுத்தார். ஆனாலும் அவர் சிரித்துக்கொண்டே மறுத்ததை கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு பிரகாஷ்ராஜ்க்கு கண்டனம் தெரிவித்த வேகத்தில் கார்த்தியையும் சாடினார் பவன்.
இதனால் பதறிப்போன கார்த்தி, தான் தவறு செய்யவில்லை என்றாலும் கூட, ஆந்திர மார்க்கெட்டை கவனத்தில் கொண்டு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.
இதன் பிறகு சனாதன தர்மம் குறித்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார் பவன். ‘’சனாதனம் என்பது ஒரு வைரஸ். அதை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் சொல்லி இருக்கிறார். இதை யார் சொன்னதோ அவருக்குச் சொல்கிறேன். சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. உங்களைப்போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். சனாதனம் அப்படியேதான் இருக்கிறது’’ என்று பேசினார் பவன் கல்யாண்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைத்தான் அவர் மறைமுகமாகச் சாடி இருந்தார். ‘’சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா எல்லாத்தையும் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தேன் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். இதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று அமைச்சராக இருந்தபோது பேசி இருந்தார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையும் நடந்து வருகின்றன.
இதை மீண்டும் நினைவுபடுத்தி பவன் கல்யாண் பேசியதற்கு, ‘’okay, lets wait and see’’ என்று பதிலளித்திருந்தார் உதயநிதி. இதனால் ஆத்திரம் கொண்டு, கோவில் வாசலில் உதயநிதியின் புகைப்படத்தினை வைத்து அதை மிதித்துக்கொண்டு செல்லும் வீடியோக்களை பரப்பினர் பவன் கல்யாண் ஆதரவாளர்கள்.
அதற்கு, ’’என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்’’ என்று பதிலடி கொடுத்திருந்தார் உதயநிதி.
இதன் பின்னர், சனாதன தர்மத்தை பாதுகாக்க, சனாதன நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்களை தடுக்க தேசிய சட்டம் தேவை என்று கோரி இருந்தார்.
இந்நிலையில், சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்று தனது ஜனசேனா கட்சியில் ‘நரசிம்ம வாராஹி படை’ எனும் புதிய அணியை உருவாக்கி இருக்கிறார் பவன் கல்யாண்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ‘’உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்குகின்றது சனாதன தர்மம் . இது இல்லாமல் நம் நாடு இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மதங்களையும் மதிக்கிறேன். அதே நேரம் எனக்கு என் மதம்தான் முக்கியம். சனாதன தர்மத்தைப் பற்றி தரக்குறைவாக பேசினால், சமூக ஊடகங்களில் பரப்பினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார்.