திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் பிரகாஷ்ராஜின் கருத்துக்கள் ஆந்திர துணை முதல்வரை ஆத்திரமூட்ட, அவர் விடுத்த எச்சரிக்கையில் கார்த்தியும் பிரகாஷ்ராஜுவும் உடனே உரிய விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், துணை முதல்வர் பவன் கல்யாணின் ஆத்திரம் இன்னும் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன திருப்பதி லட்டு விவகாரம். இந்த நிலையில், ‘’இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதற்காக தேசிய அளவில் ஏன் அச்சத்தை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இப்படி நடக்கிறதே?’’ என்று ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாணை கேட்டிருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இதில் ஆத்திரமடைந்த பவன்கல்யாண், ‘’பிரகாஷ்ராஜ் எனக்கு நல்ல நண்பர். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. ஆனால், இந்து தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சனாதன தர்மத்தையும் புனிதத்தையும் மீறுகின்றபோது பேசுவது கூட தவறு என்று சொன்னால் எப்படி?’’ என்று கேள்வி எழுப்பியவர், ‘’ இதே தவறு மற்ற வழிபாட்டு தலங்களில் நடந்தால் பிரகாஷ்ராஜ் இப்படித்தான் பேசுவாரா? நாட்டில் என்ன நடந்தாலும் இந்துக்களுக்கு பேச உரிமையில்லையா?’’ என்று ஆவேசப்பட்டிருந்தார்.
ஆந்திராவில் நடந்த மெய்யழகன் படத்தின் விழாவில் அப்படத்தின் நடிகர் கார்த்தியிடம், அவர் நடித்த சிறுத்தை படத்தின் டயலாக்கை எடுத்து,ஒரு லட்டு வேண்டுமா? ரெண்டு லட்டு வேண்டுமா? என்று தொகுப்பாளினி கேட்க, அது ரொம்ப உணர்வுப்பூர்மான விசயம். அது பற்றி பேச வேண்டாம் என்று சிரித்துக்கொண்டே கார்த்தி சொல்ல, அரங்கத்தினரும் சிரித்தனர். உடனே, லட்டு விவகாரத்தில் கார்த்தி நையாண்டி செய்ததாக வைரலானது.
இதுகுறித்த கேள்விக்கும் ஆத்திரமடைந்த பவன்கல்யாண், ‘’இந்து தெய்வங்களை நையாண்டி செய்வதையும், கேலிகள் செய்வதயும் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? இதுதானா நீங்கள் பேசுகின்ற மதச்சார்பின்மை?’’ என்றவர், ‘’சனாதன விசயங்களில் கேலி செய்வது ஏற்புடையதல்ல என்று திரைத்துறையினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
இதைக்கேட்டதும் பதறியடித்த கார்த்தி, ‘’நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் திருப்பதி வெங்கடாசலபதி பக்தன்’’ என்று சொல்ல, ‘’நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் நான் இந்தியா வந்ததும் முழு விளக்கம் தருகிறேன். நேரம் இருந்தால் நான் சொன்னதை மீண்டும் ஒருமுறை படிக்கவும்’’ என்று பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.