பிராமணக் கடப்பாரையை வைத்து திராவிடக் கோட்டையை உடைப்பேன் என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பு நடத்திய விழாவில் நம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசினார். நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்தவர்கள் பிராமணர்கள். சீமானைப் (Seeman) பொறுத்தவரை, எந்த மேடை கிடைக்கிறதோ அந்த மேடைக்குத் தகுந்தது போல கால் நூற்றாண்டு காலமாக பேசி வருகிறார்.
இந்த முறை பேசியது பிராமண சமுதாயத்தின் பின்னணியில் அமைந்த மேடை என்பதால், மகாகவி பாரதியாரை உயர்த்தியும், தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத்தை எதிர்த்தும் பேசினார். இதே சீமான், பெரியார் இயக்கங்களின் மேடைகளில் பெரியாரைப் போற்றியும், பிராமணர்களை இழிவுசெய்தும் பேசியவர்தான். இன்றைய சமூக வலைத்தள உலகத்தில் எது ஒன்று காட்சியாக்கப்படுகிறதோ அதன் பின்னே ஓடுகின்ற மனநிலையில் மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். சார்பு விழாவில் சீமான் பேசியது காட்சி வடிவில் பரவலாக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து பாரதியாரா? பெரியாரா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி, அரங்குகளிலும் நடந்து வருகிறது. எதற்காக இப்போது இந்த விவாதம்? இதன் நோக்கம் என்ன?
பெரியாருக்கும் பாரதியாருக்கும் 4 வயது வித்தியாசம்தான். பாரதியார் 40 வயதுக்குள் பல படைப்புகளைக் கொடுத்துவிட்டு இறந்துபோனார். பெரியாரின் (Periyar) பொதுவாழ்வு என்பது 40 வயதுக்கு மேல்தான் முழுவீச்சுடன் தொடங்கியது. அதன்பிறகு, 55 ஆண்டுகள் சமுதாய மறுமலர்ச்சிக்காக சளைக்காமல் போராடினார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசியக் கவிஞராக-கட்டுரையாளராக-பத்திரிகையாளராக செயல்பட்ட மகாகவி பாரதியாரின் எழுத்துகளில் புதிய சிந்தனைகள் தெறித்தன. அவருடைய தமிழ் நடையில் புதுமை இருந்தது. பெண் விடுதலை, பெண் கல்வி, மத நல்லிணக்கம், மக்களிடையே ஒருமைப்பாடு, வெள்ளையர் ஆதிக்கத்திற்கென சுதந்திர உணர்ச்சி ஆகியவை பாரதியார் (Bharathiyar) படைப்புகளின் தனிச் சிறப்பு.
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல.. ’என்றும், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்றும் தமிழ் மொழியின் சிறப்பை மகாகவி பாடியிருக்கிறார். சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்றும் அவர் எழுதியிருக்கிறார். இந்தியாவை ஆரிய நாடு என்று பெருமையுடன் பாடுவதும் எழுதுவதும் பாரதியின் வழக்கமாக இருந்தது. சனாதன மதக் கொள்கையையும் பாரதியார் ஆதரித்தார். இவையெல்லாம் பாரதத்தின் பெருமைகளாகவும், இந்தப் பெருமைகளைப் பாதுகாத்தபடி, மறுமலர்ச்சி காண வேண்டும், புதுமைப் பெண்கள் உருவாக வேண்டும் என்பது பாரதியின் கனவாக இருந்தது. அதை அவர் தன் படைப்புகளில் தெளிவாக வெளிப்படுத்தினார்.
பெரியாரிடம் இருந்தது கனவல்ல, செயல்திட்டம். சமுதாய மாற்றத்தினை உருவாக்கும் எண்ணம் கொண்டிருந்த பெரியார், முதலில் காங்கிரஸில் பாடுபட்டார். அங்கு சமூக நீதிக் கொள்கைக்கு அவருக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், சுயமரியாதை இயக்கம் கண்டார். நீதிக்கட்சிக்குத் தலைவராகி, இரண்டு அமைப்புகளையும் இணைத்து திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை நடத்தினார். அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, பெரியாரின் செயல்திட்டங்களை சட்டவடிவமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்தது. இன்று இந்திய அளவில் பெரியாரின் சமூக நீதிக் கொள்கை பேசப்படுகிறது.
சமூக நீதிக் கொள்கையால் தங்கள் ஆதிக்கம் தகர்ந்ததாகக் கருதும் சமூகத்தினர், பெரியாருக்கு எதிராகப் பாரதியாரை முன்னிறுத்துவதும், பள்ளிப்பருவத்திலிருந்தே பாரதியை அறிமுகப்படுத்துவதும், பிற சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்களை கைக்கருவியாக்கி பெரியாரை எதிர்க்கச் செய்வதும் பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். இப்போது அவர்களின் புதிய கைக்கருவியாகத் தன்னை ஒப்படைத்திருக்கிறார் சீமான். அவருடைய சுயலாப-சுயதேவைகளுக்கான நிலைப்பாட்டை பொது அரசியல் நிலைப்பாடாகக் கருதி, பாரதியாருக்கு எதிராகப் பெரியாரையும், பெரியாருக்கு எதிராகப் பாரதியாரையும் நிறுத்தி தொடர்ச்சியாக நடைபெறும் விவாதங்களால், தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சினைகள் பின்னுக்குப் போய்விடக்கூடாது.
தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகாகவிஞர் பாரதியார். தமிழ்நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகத்தானத் தலைவர் பெரியார். பாரதியிடம் முற்போக்கு கருத்துகள் இருந்ததுபோலவே, வர்ணாசிரமம் உள்ளிட்ட பழமையான தத்துவங்கள் மீதான பிடிப்பும் இருந்தது. பெரியாரிடம் தமிழர்கள் மீதான அக்கறை இருந்தது போலவே, தமிழ்மொழியை பழம்பெருமை கொண்டதாக மட்டுமே வைத்திருந்த பண்டிதர்கள் மீது அவருக்கு கோபம் இருந்தது.
பாரதியார், தான் காண விரும்பிய மாநிலத்தை கவிதைகளால் கட்டமைத்தார். அதைன நேரில் காணும் வாய்ப்பின்றி இளம் வயதிலேயே இறந்துவிட்டார். பெரியார், ஓர் இயக்கத்தைக் கட்டமைத்தார். அயராது உழைத்தார். பல தொண்டர்களையும் தலைவர்களையும் உருவாக்கினார். தான் வாழும் காலத்திலேயே தன் கொள்கைகள் நிறைவேறுவதைக் கண்டார்.
ஒருவரை முன்வைத்து இன்னொருவரைத் தாக்குவது யாரோ கொடுத்த அசைன்மென்ட்டுக்கு, தானாக பலியாகும் செயலாகவே முடியும்.
