பெரியாரா? பிரபாகரனா? என்ற விவாதத்தை எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தொடக்க காலங்களில் பெரியாரை ஏற்றுக்கொண்ட சீமான், பெரியாரை விமர்சித்தால் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று நாம் தமிழர்களை எச்சரித்த சீமான், இன்றைக்கு பெரியாரை கடுமையாக விமர்சிக்கிறார்.
இந்த முரண்பாடு ஏன்? என்று கேட்டால், ஈழத்திற்குச் சென்று பிரபாகரனை சந்திக்கும் வரைக்கும் தான் பெரியார் குறித்து பேசினேன். ஈழத்திற்கு சென்ற போதுதான் புரிதல் வந்தது என்று சொல்கிறார்.
ஆனால், ஈழத்திற்குச் சென்று வந்த பின்னர், ‘’என் தலைவன் என்னிடத்திலே சொன்னார்… பெரியாரின் சிந்தனைகளை படித்து வளர்ந்த பிள்ளைகள்… பேரறிஞர் அண்ணா எனும் பெருமகனின் பேச்சைக்கேட்டு, எழுத்தைப் படித்து வளர்ந்த பிள்ளைகள், தூர தேசத்திலே வாழ்ந்த நாங்கள் போராளிகளாக மாறி நிற்கிறோம்’’ என்று பேசி இருக்கிறார் சீமான்.
நாங்கள் போராளிகளாக நிற்பதற்கு காரணம் பெரியாரும் அண்ணாவும் என்று சொல்லி இருக்கிறார் பிரபாகரன். அப்படி இருக்கும்போது ஈழத்திற்கு சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து பின்னர்தான் எனக்கு புரிதல் வந்தது. அதனால் பெரியாரை எதிர்க்கிறேன் என்று சொல்லுவது ஏன்?
பிரபாகரன் சொன்னது பொய்யா? சீமான் சொன்ன கதைகளில் இதுவும் ஒன்றா? இல்லை, இது உண்மை என்றால் பிரபாகரனே பெரியார் குறித்து தன் நிலைப்பாட்டினை சொன்னபிறகும் சீமானுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.