தமிழின விடுதலைக்காகப் போராடியவர் தந்தை பெரியார் என்று நேற்று வரையிலும் வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி இன்று தமிழின விரோதி என்று பெரியாரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது. அடுத்து, தமிழீழ விடுதலைக்காக போராடியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது MGR ஜுஜூபி என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சனையை முன் வைத்துதான் தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி. அதனால்தான் ’ஈழத்தமிழர் நலன் காக்க உதவிக் கரம் நீட்டியவர் மக்கள் திலகம்’ என்று எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் மணிக்கணக்கில் பேசினார் சீமான்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பிரச்சாரமும் செய்தவர் சீமான்.
இப்போது அவர் பெரியாருக்கு எதிராக பேசி வருவது ‘டெல்லி அசைன்மெண்ட்’ என்கிறார்கள் அரசியல் தலைவர்கள். சீமானின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக உள்ளார் ரவீந்திரன் துரைசாமி என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
தீவிர பாஜக ஆதரவாளரான ரவீந்திரன் துரைசாமி, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி ஒதுங்கிச்சென்ற ரஜினிகாந்தை வம்படியாக அரசியலுக்குள் இழுத்து அதன் மூலம் பாஜகவுக்கு பலம் சேர்க்க பலவித முயற்சிகள் செய்து வந்தார். கட்சி வேண்டாம் ஆளை விடுங்க சாமி என்று ரஜினிகாந்த் சொன்னதும், பாஜகவுக்கு ஆதரவுக்குரலாவது கொடுங்க என்று ரவீந்திரன் துரைசாமி குட்டிக்கரணம் அடித்துப்பார்த்தும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.
இப்போது சீமானை பாஜக பக்கம் தள்ளிக்கொண்டு போயிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. பாஜகவில் கொடுத்த அசைன்மெண்ட் படிதான் பெரியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார் சீமான் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இவர்தான் சீமானை அழைத்துச் சென்று ரஜினியை சந்திக்க வைத்து சலசலப்புகளை ஏற்படுத்தினார். பிரதமர் மோடியே எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசி வீடியோவே வெளியிட்டார். ஆனால், ரவீந்திரன் துரைசாமியோ ’’MGR ஜுஜூபி – NTR தான் பெரிய ஆள்’’
தவெகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற சீமான் கனவில் விஜய் மண்ணை அள்ளிப்போட்டு விட்டதால்தான் தவெகவின் கொள்கைத் தலைவராக இருக்கும் பெரியாரை அதிகம் விமர்சிக்கிறார் சீமான் என்ற விமர்சனமும் உள்ளது. அதற்கேற்றார் போல், எம்.ஜி.ஆரை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார் விஜய். இதனால்தானோ என்னவோ தெரியவில்லை நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த எரிச்சல் எம்.ஜி.ஆர். வந்திருக்கிறது.
’’MGR ஜுஜூபி – NTR தான் பெரிய ஆள்’’ என்கிறார் ரவீந்திரன் துரைசாமி. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி சாதித்ததை பார்த்துதான் கட்சி தொடங்கினார் என்.டி.ஆர். கட்சியின் பெயரை தெலுங்கு தேசம் என்று வைக்கச்சொன்னதும் எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆர்தான் தனக்கு அரசியல் முன்னோடி என்று சொன்னவர் என்.டி.ஆர். ஆனால், ரவீந்திரன் துரைசாமி MGR ஜுஜூபி – NTR தான் பெரிய ஆள் என்று பேசுவது அபத்தம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.