
Graphical Image
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவை 0.1 மில்லி கிராமாக அதிகரிக்க FSSAI கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கி இருந்த தகவல் வெளியாகியுள்ளது.
மசாலா பொருட்களில் கலக்கப்படும் MRL அளவு முன்பு 0.01 மில்லி கிராமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் அளவை 0.1 கிராம் ஆக அதிகரிக்க FSSAI அனுமதி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இது பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என FSSAI உணவுப் பாதுகாப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியான உத்தரவில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லிக்கான (MRL) அளவை 0.01 மில்லி கிராமிலிருந்து 0.1 மில்லி கிராமாக, அதாவது 10 மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளது.
இதுபோல் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியின் அளவை அதிகரிப்பது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், என்று ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பூச்சிக்கொல்லியின் அளவுகளைத் தளர்த்துவது, வெளிநாடுகளில் உள்ள பெரிய சந்தைகளில், இந்தியாவின் மசாலா பொருட்களை நிராகரிக்க வழிவகுக்கும் என்று ஆர்வலர்கள் எச்சரித்துள்ளதாகவும், இந்தியாவில் உள்ள மக்களும் அதிக அளவில் பூச்சிக்கொல்லியைக் கொண்ட மசாலா பொருட்களைச் சாப்பிடக்கூடும் என்றும், Times of India செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மசாலா பிராண்டுகளான MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றில் சில மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சில வகை மசாலாக்களில் எத்திலியின் ஆக்சைடு (ETO) அதிக அளவில் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இந்த பிராண்டுகளின் சில மசாலாக்கள் தடை செய்யப்பட்டது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் MDH மசாலா பொருட்களில் சால்மோனெல்லா இருந்ததால் ஏராளமான மசாலா பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கஷ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் என்று செய்திகள் வெளியானது.
இதனால் FSSAI, இந்தியா முழுவதும் உள்ள மசாலா பொருட்களைச் சோதனை செய்ய உத்தரவிட்டது. இது குறித்து பேசிய MDH மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் ETO பயன்படுத்தவில்லை என்றும் மறுத்துள்ளது.
இந்த சூழலில், பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லிகளின் அளவை அதிகரிக்கும் FSSAI அமைப்பின் இந்த முடிவு அறிவியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதா? என்றும் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அதிகபட்ச பூச்சிக்கொல்லி அளவை தீர்மானிக்கும் போது, பதிவு செய்யப்படாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது சரியல்ல என்றும் எச்சரித்துள்ளனர்.