வழிபாட்டுத் தலங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கொள்கைக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதம் உரிமை கொண்டாடுவதும், அதை வைத்து அரசியல் செய்வதும், அதன் பின்னணியில் மதக்கலவரங்கள் உருவாவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தொடங்கிய ரதயாத்திரைதான் இதன் தொடக்கப் புள்ளி.
அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அதன் பரிவாரங்கள் உரிமை கோரியதைத் தொடர்ந்து, அந்த மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ரதயாத்திரையை நடத்தினார் அத்வானி. அது மதக்கலவரத்தை உருவாக்கி ரத்த யாத்திரையானது. பின்னர், 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி தரைமட்டமாக இடிக்கப்பட்டது. அதையொட்டி நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து மும்பை உள்ளிட்ட நகரங்களில் வெடிகுண்டுகளும் வெடித்தன. அப்பாவி மக்கள் பலியாயினர். தமிழ்நாடு, கேரளா போன்ற முற்போக்கான மாநிலங்கள் மட்டுமே அப்போது மதநல்லிணக்கத்தின் அடையாளமாக எந்தக் கலவரமும் இல்லாமல் அமைதியாக இருந்தன.
பாபர் மசூதி தொடர்பான வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், மதத்தினரின் நம்பிக்கையை மதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு அனுமதியளித்தது. பா.ஜ.க.வின் முதன்மையான கொள்கையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான்.
அதன்படி அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டி, அதையே தனது அரசின் மகத்தான சாதனையாக கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் நரேந்திர மோடி. அவர் வழியில் பா.ஜ.க. தலைவர்களும் அதையே முன்னிறுத்தினர். ஆனாலும், அயோத்தி தொகுதியிலேயே பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாமல் போனது என்பதுதான் கள யதார்த்தம். ராமரும் கூட பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ளவில்லையோ என்று மக்கள் பேசத் தொடங்கினர். ஆனால், பா.ஜ.க.வினர் தொடர்ச்சியாக முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து, இந்த மசூதிகளெல்லாம் ஒரு காலத்தில் கோவில்களாக இருந்தன என்றும், அதனை இடித்துவிட்டுத்தான் அதன் மீது மசூதியைக் கட்டியிருக்கின்றனர் என்றும் பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும் சர்ச்சைகளை உருவாக்கினர்.
மதுரா, வாரணாசி எனத் தொடர்ந்த இத்தகைய சர்ச்சகைள் அண்மையில் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள மசூதியை குறிவைத்தபோது பலர் உயிரிழக்கும் அவலமும் ஏற்பட்டது. புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா வரை சர்ச்சையை உருவாக்கினர். குறிப்பாக, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை குறிவைத்த நிலையில், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் சிலவும் இலக்காகின. இவை தொடர்பாக பா.ஜ.க பரிவாரங்கள் சார்பில் பல மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றமும் அனுமதிளித்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அது பல்வேறு படையெடுப்புகளை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எதிர்கொண்டு வருகிறது. மொகலாயர் படையெடுப்புகளால் இந்து கோவில்கள் தகர்க்கப்பட்டு அந்த இடங்களில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்பட்டன என்பதுதான் பா.ஜ.க தரப்பின் குற்றச்சாட்டு. உள்நாட்டு அரசர்கள் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தபோது, வைணவக் கோவில்கள் தகர்க்கப்பட்டு, சைவ சமயக் கோவில்கள் எழுப்பப்பட்டன. சமணப் பள்ளிகள் சிதைக்கப்பட்டன. புத்த விகாரைகள் பல இந்துக் கோவில்களாகின. பழைய நடைமுறையே தொடர வேண்டுமென்றால் இந்து கோவில்களில் பலவும் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அதனால்தான், 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் எந்த வகையில் இருந்தனவோ அப்படியே தொடர வேண்டும் என சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தைத் திருத்துவதற்கு பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றுதான், வழிபாட்டுத் தலங்கள் குறித்த வழக்குகள்.
இவற்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கொள்கையை விரும்பும் அனைவராலும் வரவேற்கப்படுகிறது. மதவாத அரசியலை நடத்தி, கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்களுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இந்த முதல்கட்ட வெற்றி தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உச்சநீதிமன்ற விசாரணையை நாடு எதிர்பார்க்கிறது.