ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஆய்வு முடிவு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பற்றிய முந்தைய மதிப்பீடுகளை விட 10 முதல் 100 மடங்கு அதிக துகள்கள் இருக்கலாம் என்று கூறுகிறது.
கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவில் மூன்று பிரபலமான நிறுவனங்கள் விற்கும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீரை ஆய்வு செய்து, 100 நானோமீட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் துகள்களை அளந்தனர்.
அந்த ஆய்வில் ஒவ்வொரு லிட்டரிலும் சுமார் 1.1 முதல் 3.7 லட்சம் வரையிலான பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அதில் 90 சதவிகிதம் நானோ பிளாஸ்டிக் துகள்களும் மீதமுள்ள துகள்கள் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள அனைத்து நெகிழித் துண்டுகளும் நுண்ணிய நெகிழித் துண்டுகள்(Microplastics) எனப்படுகிறது. அதை விட குறைவான நெகிழித் துண்டுகளை நானோபிளாஸ்டிக்ஸ் (Nanoplastics, billionth of meter) என வகைப்படுத்தப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
முந்தைய ஆய்வுகள் இது குறித்து முழுமையாக அடையாளம் காணப்படாத ஒன்றாக இருந்ததாகவும் நச்சுத்தன்மை ஆய்வுகள் யூகத்தின் அடிப்படையில் முன்பு இருந்ததாகவும், கொலம்பியா காலநிலை பள்ளியின் வேதியல் ஆசிரியர் பெய்சான் யான் கூறியுள்ளார்.
சமீப ஆண்டுகளில் நிலம், நீர், உணவு மற்றும் காற்றில் கூட நெகிழித் துண்டுகள் இருப்பது கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய பிளாஸ்டிக்குகள் படிப்படியாக சிறிய துண்டுகளாக உடையும்போது உருவாகும், இந்த பிளாஸ்டிக்குகள் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்குள் நுழைகின்றன. இதனால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் பாதிக்கக் கூடிய கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்த ஆய்வு, பயோமெடிக்கல் நோக்கங்களுக்காக அவற்றின் வடிவங்களை கூறியதோடு, நீரில் உள்ள பிளாஸ்டிக் துகள்களையும் கண்டறிந்து வகைபடுத்தியுள்ளனர். குடிநீர் பாட்டில்களில் உள்ள நீரில் polyethylene terephthalate, polyamide, polystyrene, polyvinyl chloride, polymethyl methacrylate உள்ளிட்ட 7 வகைகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த இந்த ஏழு பிளாஸ்டிக் வகைகள், தண்ணீர் மாதிரிகளில் அவர்கள் கண்டறிந்த அனைத்து நானோ துகள்களையும் ஒப்பிடும்போது வெறும் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள நானோ துகள் எந்த வகையான பிளாஸ்டிக் என்பது தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸை விட நானோ பிளாஸ்டிக்குகள் குறைவான நிறை(Mass) கொண்டவை என்றாலும், மனிதர்களுக்குள் எளிதில் செல்ல கூடிய ஒரு பொருள் ஆகும், இது குறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.