சாரிவாரிக் கணக்கெடுப்பை (caste census) நடத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு எதிராக பா.ம.க.வின் அன்புமணி தலைமையில் ஆதரவுக் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தின. சாதி வாரிக்கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதை நீதிமன்றங்கள் பல முறை தெளிவுபடுத்தியதுடன், மத்திய அரசும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இருந்தும், தெலங்கானா, பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களை உதாரணங்களாகக் காட்டி தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை நிர்பந்திக்கிறார் அன்புமணி.
அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த அதே நாள், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் அவரது தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, “அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ விரைந்து விசாரிக்க வேண்டும். அன்புமணி சார்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவுகள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்பதாகும்.
அப்பாவின் தலைமையில் நடந்த நிர்வாகக்குழுக் கூட்டத்தில் மகன் மீது சி.பி.ஐ. விசாரிணை கோரப்பட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கலாம். நவீனகால மனுநீதிச் சோழன் கதையாகவும் தெரியலாம். ஆனால், இவை அனைத்தும் சொந்தக் குடும்பப் பிரச்சினைகளில் எதிரொலியாக கட்சிக்குள் இருப்பவர்கள் இரு தரப்பாகக் கச்சை கட்டி நிற்கின்ற அவலமாக மாறியுள்ளது.
பா.ம.க.வின் தலைவராக தேர்தல் ஆணையம் அன்புமணியைத்தான் அங்கீகரித்துள்ளது என்று அவரது தரப்பினர் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்திற்கு சென்றது ராமதாஸ் தலைமயிலான பா.ம.க.
மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஒரு கட்சியின் தலைவர், சின்னம் ஆகியவை குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. எனினும், அது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும். அங்கீகாரமில்லாத கட்சியின் தலைமை குறித்து தேர்தல் ஆணையம் தலையிடத் தேவையில்லை என்று தெரிவித்திருந்தது. இது பா.ம.க.வின் அங்கீகாரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால், இறுதியில் யார் தலைமையில் கட்சி என்பது உறுதியாகலாம்.
அதற்கு முன்பாகவே, அப்பா-மகன் இருதரப்பிலும் உள்ளவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். பா.ம.க.வின் முன்னாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணிதான் ராமதாஸையும் அன்புமணியையும் பிரித்துவிட்டார் என்பது அன்புமணி தரப்பினரின் குற்றச்சாட்டு. ஜி.கே.மணியோ, தன்னால்தான் அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சினை என்றால், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, ஒதுங்கத் தயார் என்கிறார். ஜி.கே.மணியின் மகனுக்கு கட்சியில் முக்கியத்துவமும் சீட்டும் கேட்பதாக அவர் மீது பழிபோடப்படுகிறது.
பா.ம.க. நிறுவனரான ராமதாஸ், நானோ என் குடும்பத்தினரோ எம்.எல்.ஏ. அமைச்சர் என பதவிக்கு வந்தால் நடுரோட்டில் வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று ஒரு காலத்தில் சொல்லியிருந்தார். ஆனால், அவருடைய அன்பு மகன் அன்புமணி, எம்.பி.யாவதற்கு முன்பே மத்திய அமைச்சரானார். இப்போது ராமதாஸின் ரத்த சம்பந்த உறவினர்கள் திடீரென கட்சிக்குள் நுழைந்த பதவி பெறுகிறார்கள் என்பதுதான் கட்சிப் பிளவுக்கு காரணமாக வைக்கப்படுகிறது.
பா.ம.க. தொடங்கப்பட்டபோது அது சமூக நீதி இயக்கமாகக் கருதப்பட்டது. தமிழ் இன இயக்கமாகப் பார்க்கப்பட்டது. அதனால், பா.ம.க. தடை செய்யச் சொல்லி பிரதமர் நரசிம்மராவுக்கு அப்போது கடிதம் எழுதினார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், நாளடைவில் பா.ம.க. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அது பிற சமுதாயங்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியது. பா.ம.க.வின் மைய நீரோட்ட அரசியலின் தன்மையை உணர்ந்து பலர் அதிலிருந்து வெளியேறினர். அன்புமணிக்கு தரப்ப்படும் முக்கியத்துவத்தினால் அதே சமுதாயத்தை சேர்ந்த சீனியர் நிர்வாகிகளும் விலகினர். “போகிறவர்கள் போகட்டும் ” என்ற மனநிலையில்தான் அப்போது ராமதாஸ் இருந்தார். இப்போது, தனக்கு எதிரான நிலையெடுத்துள்ள அன்புமணியுடன் பலரும் போகிறார்கள் என்பதால் ராமதாஸ் தரப்பு கோபப்படுகிறது.
எந்தப் பாசம், அன்புமணிக்கு (Anbumani) எம்.பி. பதவியில்லாமல் மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்ததோ, அந்தப் பாசம் இப்போது வெறுப்பாகி, அந்த மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோது நடைபெற்ற ஊழல் முறைகேடுகளுக்காகப் போடப்பட்ட சி.பி.ஐ. வழக்கை விசாரிக்க வேண்டும் என தைலாபுரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தொடங்கிய போது தெரிந்த இலக்கிற்கு நேரெதிரான திசையில் ஓர் இயக்கம் பயணித்தால் என்னவாகும் என்பதற்கான அண்மைக்கால உதாரணம் பா.ம.க.
