விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியின் வாக்குகளை பாமகவும், நாதகவும் குறி வைத்திருக்கின்றன.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்தது, அதன் மூலம் விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்குகளை நாதக பக்கம் திருப்பிவிடலாம் என்ற கணக்குதான் என்ற பேச்சு இருந்தது. அறிவிப்பின் மூலமாக சீமான் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவரது கட்சியின் நிர்வாகிகள் உண்ணாவிரத மேடைக்கே சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுகவின் வாக்குகளை பாமகவும் குறிவைத்திருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் படத்தினை பேனரில் வைத்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். தேமுதிகவும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணியில் உள்ளன. இந்நிலையில், அவ்விரு கட்சிகளின் ஆதரவையும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கோருகிறது பாமக.
பாமகவின் இந்த வெளிப்படையான கோரிக்கையை ஏற்று அக்கட்சிக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா? இல்லை, நாதகவுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மக்களவை தேர்தலில் தங்கள் கூட்டணியில் பாமக வரும் என்று கடைசிவரைக்கும் நம்பி இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், கடைசி நேரத்தில் பாஜக கூட்டணிக்கு சென்றுவிட்டது பாமக. அப்படி இருக்கும்போது பாமகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமா அதிமுக என்ற கேள்வி இருக்கிறது.
அதே நேரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதற்கு காரணமே, மறைமுகமாக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவை ஆதரிப்பதற்குத்தான் என்ற பேச்சும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அதிமுக வாக்கு திமுகவுக்குத்தான் கிடைக்கும். எம்.ஜி.ஆர். ஒரு காலத்தில் திமுகவில்தான் இருந்தார் என்பதால் அதிமுக வாக்குகள் திமுகவிற்குத்தான் கிடைக்கும் என்று உறுதியாகச்சொல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.