
ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதால், பாமக போட்டியிடுவது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த புகழேந்ந்தி உடல்நலக்குறைவினால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்தது தேர்தல் ஆணையம்.

மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருந்த விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் நடந்தது போலவே விக்கிரவாண்டி தொகுதிக்கும் நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், முதற்கட்ட தேர்தலில் அது முடியாததால், தற்போது 4வது கட்ட தேர்தல் நடந்திருக்கும் நிலையில், 7 கட்ட தேர்தலான ஜூன் 1ம் தேதி அன்று விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தேர்தல் ஆணையமோ இதுகுறித்து எந்த அறிவிப்பும் செய்யாமல் மவுனமாக இருக்கிறது. 7வது கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்பார்த்திருந்த நிலையில், 7வது கட்ட தேர்தல் அறிவிப்புடன் இதுகுறித்த தகவலை வெளியிடவில்லை தேர்தல் ஆணையம். ஜூன் 1ல் 8 மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கு நடைபெறும் 7வது கட்ட தேர்தல் அறிவிப்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லாததால் மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர்தான் விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அதே நேரம் விக்கிரவாண்டி 7வது கட்ட தேர்தலுடன் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவந்துவிடும் என்ற தகவல் பரவுகிறது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாசிடம், விக்கிரவாண்டி தொகுதியில் பாமக களம் இறங்குகிறதா? என்ற கேள்வியினை செய்தியாளர்கள் முன்வைத்தபோது, ‘’விக்கிவாண்டி இடைத்தேர்தல் எப்போது என்று தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. அந்த அறிவிப்பு வந்ததும் பாமகவின் முடிவு அறிவிக்கப்படும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்பம் தெரிவித்து வருவதால் அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம்’’ என்கிறார்.