
ராமதாசின் பல தேர்தல் கணக்குகளில் ஒன்று 10.5% இட ஒதுக்கீடு. அதை 2026க்கும் கொண்டு வருகிறார். கூடவே ஒரு புது பார்முலாவும் வைத்திருக்கிறார்.
பாமகவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடித்தார் அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி. ஒவ்வொரு கூட்டணியின் போதும் ஒரு வலுவான நிபந்தனையை வைக்கும் ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித தனி உள் ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றினால் கூட்டணி என்று கறார் காட்டியதால் கடைசி நேரத்தில் வேறு வழியின்றி 10.5 சதவிகித தனி உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்றினார் எடப்பாடி பழனிசாமி.
தென் மாவட்டங்களில் இது கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்கும் என்று ஓபிஎஸ் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அந்த மசோதாவை நிறைவேற்றினார் பழனிசாமி. அந்த மசோதாவை நிறைவேற்றியதால் பாமக கூட்டணிக்கு வந்தது. ஆனால் அந்த மசோதா தென் மாவட்டங்களில் எதிர்வினைகளைக் கொடுத்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு அதுதான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

இப்போது 2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ்.
’’மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் இதுவரையிலும் நடந்திராத போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். அந்த போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்’’ என்று அழுத்தமாகப் பேசினார் ராமதாஸ். மாமல்லபுரத்தில் நடந்த பாமக வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டில்தான் இப்படிப் பேசினார்.
’’இந்த ஊமை ஜனங்களுக்காக உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று தம்பி முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்லி, 10.5% கொடுங்கள் என்று கோட்டைக்குச் சென்று அவரிடம் வாதாடி இருக்கிறேன்’’ என்று சொன்னவர்,
’’உங்களிடம் நான் கேட்பது எல்லாம் ஒரே ஒரு ஓட்டு. நீங்கள் இதைச் செய்தால் நாம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து நாம் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்’’ என்றார்.

’’நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததால் என்னை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆள் இல்லை. ஆனாலும் சொல்கிறேன்; தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்திய மக்களுக்கு என்னைப்போன்று சமூக நீதிக்காக, இட ஒதுக்கீடுக்காக போராடியவர் யாருமே இல்லை. நான் இதை பெருமையாக சொல்லிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்தியாவிலேயே இதுவரை இதுபோன்ற ஒரு தலைவரை கண்டதுண்டா’’ என்று ஜெயபாஸ்கர் எழுதி புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பார். சமூகநீதிக்காக போராட்டங்களை என்னைப்போல் இந்தியாவில் வேறு யாரும் செய்திருக்கிறார்களா? யாரும் இல்லை. என்னைப் போன்று யாருமில்லை’’என்ற ராமதாஸ்,
’’காலையில் எழுந்ததும் உலகத்தில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் உலகத்திலேயே நான் ஒருவன் மட்டும்தான்.
ஒருவன் பிறந்தநாளில் எனக்கு போன் செய்து பிறந்தநாள் என்றான். நான் வாழ்த்து சொன்னேன். அவன் எல்லோரிடமும் சென்று, கடவுளிடம் பேசிவிட்டேன். கடவுள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டது என்றான். அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக பலரும் முதலில் எண்ணினர். பின்னர் அவன் அய்யாவிடம் பேசினேன். அய்யாதான் எனக்கு கடவுள் என்று சொல்லி இருக்கிறான். இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே, அய்யாதான் எங்களுக்கும் கடவுள் என்று சொல்லி இருக்கிறார்கள்’’என்று சுய பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தான் வகுத்து வைத்திருக்கும் புது கணக்கு பற்றியும் கட்சியினரிடம் பகிர்ந்து கொண்டார் ராமதாஸ்.
’’அந்த பார்முலா சாதாரண பார்முலாதான்’’ என்று அவரே குறிப்பிட்டார்.
2000 x 50 = 1,0000 என்பதுதான் ராமதாஸ் வகுத்திருக்கும் பார்முலா. அதாவது, ஒரு தொகுதிக்கு வன்னியர்கள் 2 ஆயிரம் பேர் ஆளுக்கு 50 வாக்குகளை சேகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு தொகுதிக்கு ஒரு இலட்சம் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும். இப்படிச்செய்தால் 50 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று சொன்னார்.