
ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் இணைந்த அந்த அரசுக்கு, மக்கள் ஜனநாயக கட்சி போன்றவையும் பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவளிக்கின்றன. காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா இருக்கிறார். முதல்வரை போலீசார் கைது செய்து, வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டனர்.
ஒமர் அப்துல்லா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினாரா? அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி ஏதாவது சிக்கியதா? சிக்க வைக்கப்பட்டதா? வருமானவரித்துறை ஏய்ப்பா? எதுவுமில்லை. அப்புறம் ஏன், போலீசார் ஒரு முதல்வரை கைது செய்ய வேண்டும்? கைது செய்யப்படும் அளவுக்கு முதல்வர் என்ன தவறு செய்தார்? முதல்வரை கைது செய்யும் அளவுக்கு அதிகாரம் கொண்ட அந்த போலீசார் யார்?
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்த தவறு, ஜூலை 13 அன்று காஷ்மீர் தியாகிகள் தினத்தையொட்டி, தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த முயன்றதுதான். அவர் முதல்வராக இருந்தாலும், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் என்பது மத்திய பா.ஜ.க. அரசின் உள்துறை நிர்வாகத்தில் உள்ளது. காரணம், ஜம்மு-காஷ்மீர் இப்போது மாநிலமாக இல்லை. அது யூனியன் பிரதேசமாக தகுதியிறக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதாவது, தமிழ்நாடு போல இருந்த காஷ்மீர் இப்போது புதுச்சேரி (பாண்டிச்சேரி) போல ஆகிவிட்டது. அதனால், மத்திய அரசின் கையில் அதிகாரம் குவிந்திருக்கிறது. அந்த அதிகாரத் திமிர்தான் முதல்வரை கைது செய்ய வைத்திருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் பார்வையில், இதிகாச-புராணங்கள் மட்டுமே இந்தியாவின் வரலாறு. அது எல்லா மாநிலத்திலும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இராமாயணம் என்பது இதிகாசம்தான். அதை வடமொழியில் வால்மீகி எழுதியதற்கும், தமிழில் கம்பர் எழுதியதற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பண்பாட்டுப் பார்வையில் கம்பர் தனது இராமாயணத்தைப் படைத்திருப்பார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, அது தனி சமஸ்தானமாக இருந்த பகுதி. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது, அவர்களுக்கு வரி செலுத்திவிட்டு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னர் ஹரிசிங் ஆட்சி செய்தார். சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். அவர்களின் பண்பாட்டு முறை- வழிபாட்டு நம்பிக்கைகள் மீது சமஸ்தான அதிகாரம் நடத்திய தாக்குதல்களால் மக்களின் போராட்டம் வெடித்தது. அப்துல் காதிர் என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது, காஷ்மீர் மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் மீது சமஸ்தான அதிகார வர்க்கத்தினர்-பிரிட்டிஷ் இந்திய போலீசார் துணையுடன் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் நாள் இது நடந்ததால் அந்த நாளை காஷ்மீர் தியாகிகள் தினமாகக் கடைப்பிடித்து, அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்துவது காஷ்மீர் அரசியல் தலைவர்களின் வழக்கம்.
மாநில அந்தஸ்தையும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்த மத்திய பா.ஜ.க. அரசு, காஷ்மீர் தியாகிகள் நாளுக்கான விடுமுறையையும் ரத்து செய்துவிட்டது. கடந்த ஜூலை 13 ஞாயிறன்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் மற்ற அரசியல் தலைவர்களும் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். போலீசாரின் தடுப்பரணை மீறி, சுவரேறிக் குதித்துதான் முதல்வர் உள்ளிட்டவர்கள் வீரவணக்கம் செலுத்த முடிந்தது.
மராட்டிய மாநிலத்தில் பிரிட்டிஷார் ஆட்சியின்போது பேஷ்வா சமஸ்தானத்துடன் நடந்த போரில் பிரிட்டிஷ் படையில் தலித் மக்கள் பங்கேற்று, பேஷ்வா ராஜாங்கத்தின் சாதி ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடினார்கள். அந்தப் போரில் வெற்றி பெற்று, அதன் நினைவாக போர் நடைபெற்ற பீமா கோரேகான் பகுதியில் வெற்றித்தூணையும் நிறுவினர். கடந்த 2018ஆம் ஆண்டு, பீமா கேரோகான் நினைவு தினத்தன்று வன்முறை வெடித்தது. வீரவணக்கம் செலுத்த முயன்றவர்களை அர்பன் நக்சல்களாக சித்தரித்து, கொடுமையான சட்டத்தில் கைது செய்தது பா.ஜ.க. அரசு. பழங்குடி இன செயல்பாட்டாளரான ஸ்டேன் சாமி. சிறையில் உடல்நலன் பாதிக்கப்பட்டநிலையில், ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது மத்திய பா.ஜ.க. அரசு. ஜாமீன் மனு விசாரணை முடிவடைவதற்கு முன்பே ஸ்டேன் சாமி இறந்து போனார்.
முன்பு மராட்டியத்திலும், தற்போது காஷ்மீரிலும் அந்தந்த மண்ணுக்குரிய பண்பாட்டை தேசவிரோதமாக சித்தரிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் தாய்மொழி காத்திட தங்கள் உயிரையே தீக்குளிப்புக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் பலி கொடுத்து, இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திய மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்வதையும் தேசவிரோதம் என்று நாளை தடை செய்யக்கூடும்.
காஷ்மீரில் பாலம் கட்டி ரயில் விட்டுப் பெருமை கொள்கிறது மோடி அரசு. கிளிக்கு தங்கக்கூண்டில் பால்சோறு வைத்தாலும் அதற்கு அதன் சிறகுதான் முக்கியம். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து என்பதுதான் சிறகு. அதை நறுக்கிவிட்டு, ரயில் விடுவது-கதை விடுவது எல்லாம் தங்கக்கூண்டு போலத்தான்.