
காக்கி உடுப்பு என்பது கம்பீரமானது. சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரம் கொண்டது. காக்கி உடுப்பில் வரும் அதிகாரியைப் பார்த்தால் மக்களுக்கு அச்சம் விலகி, நம்பிக்கை பிறக்கவேண்டும். நானும் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக காக்கி உடுப்பில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பேன் என்ற எண்ணம் சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏற்பட வேண்டும். நடைமுறையோ வேறு மாதிரியாக இருக்கிறது.
காக்கி என்றால் மக்களுக்கு பயம் ஏற்படுகிறது. சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்-தாதாக்கள் உள்ளிட்ட அனைத்து கிரிமினல்களும் காக்கிகளுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உலவுகிறார்கள். அப்பாவிகள் சிக்கினால் காக்கிகள் அடித்து நொறுக்கிறார்கள். உரிமைகளைப் பேசுபவர்களை காக்கிகள் பொய் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் தள்ளுகிறார்கள். இதுதான் பொதுமக்களுக்கு போலீசார் மீது தற்போதுள்ள பார்வை.
கால் நூற்றாண்டுக்கு முன்பு, ‘போலீஸ் மனிதர்கள்’ என்ற தலைப்பில் ஒரு பிரபல வார இதழில் தொடர் கட்டுரைகள் வெளியாகின. போலீஸ்துறையில் எத்தகைய சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் தொடர் அது. அந்தத் தொடர் வெளியாகக் காரணம், அப்போதும் போலீசாரின் அட்ராசிட்டிகள் அதிகளவில் இருந்தன. எல்லாப் போலீசும் அப்படியல்ல, கடமை தவறாத-மக்கள் மீது அக்கறை கொண்ட நேர்மையான-மனிதாபிமானம் கொண்ட போலீசாரும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக மெனக்கெட்டு எழுதப்பட்ட தொடர் கட்டுரை அது. அப்போதைய ஆட்சி வேறு. இப்போதைய ஆட்சி வேறு. ஆனால், இப்போதும் அப்படி மெனக்கெட்டால்தான் நல்ல போலீஸ் அதிகாரிகளை மக்களிடம் அறிமுகப்படுத்த முடியும் என்ற நிலைமை உள்ளது. ஒரு நல்ல போலீஸ் அதிகாரியை அடையாளம் காண்பதற்குள் 400 அடாவடி போலீஸ் பற்றிய ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவிடும்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் என்ற இடத்தில் உள்ள கோயிலின் காவலாளி அஜித்குமார், நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையில் கடுமையானத் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த செய்தி, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. அஜித்குமாரின் சகோதரரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். கோயிலுக்கு வந்த சென்ற இரண்டு பெண்கள் தங்களின் நகை, பணம் காணவில்லை எனக் கொடுத்த புகாரின் பேரில் அஜித்குமாரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படாமல் விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டதையும், உரிய நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறியது ஏனென்றும், புகார் கொடுத்த பெண்களின் பின்னணியும் செல்வாக்கும் என்ன என்றும், அவர்களுக்கு உள்ளூர் ஆளுங்கட்சியினரும் உயரதிகாரிகளும் ஆதரவாக இருந்தார்களா என்ற கேள்வியும் எதிர்க்கட்சியினராலும், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களாலும் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு உரிய விடை கிடைத்தால், இந்த வழக்கில் பல உண்மைகள் வெளிப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அப்பாவும் மகனும் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரத்தை கேள்வி கேட்ட தி.மு.க.வை நோக்கி, சிவகங்கை மாவட்ட காவல் மரணம் தொடர்பாக தி.மு.க. ஆட்சியை நோக்கி அ.தி.மு.க கேள்வி எழுப்பியதுடன், அக்கட்சியின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளனர். அஜித்குமார் என்ன தீவிரவாதியா என்று நீதிமன்றம் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலான அதிர்வை ஏற்படுத்தியுள்ள இந்தக் காவல் மரணத்தையடுத்து, முதலமைச்சர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடடிவக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர்.
சட்டத்தை எவரும் கையில் எடுத்துக்கொண்டு செயல்படக்கூடாது என்பதால்தான் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகள் யாரும் காவல் நிலையத்திற்கு சென்று அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார் முதலமைச்சர். சொந்தக் கட்சிக்காரர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் மீது வழக்குகள் பாய்ந்தாலும், சில நேரங்களில் அது பொய்யான வழக்காகவே இருந்தாலும் தி.மு.க. நிர்வாகிகளால் காவல் நிலையத்திற்கு சென்று ‘நியாயம்’ பேச முடியாது. மீறினால், காவல்துறை தரப்பிலிருந்தே முதலமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் பறந்து, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகி ‘கட்டம்’ கட்டப்படுவார்.
கட்சிக்காரர்களுக்கு நிபந்தனை விதித்து, அவர்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்கும் முதலமைச்சரின் நிர்வாகத்தில் உள்ள காவல்துறையினர் தங்கள் இஷ்டத்திற்கு ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சகட்டமாக, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் மரணம் என்கிற கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
காக்கி ரவுடிகளை ஒடுக்காவிட்டால், நல்லாட்சிக்கு அவர்களே சாபக்கேடாக அமைந்துவிடுவார்கள்.