தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம். இதயமும் மனிதநேயமும் உள்ள யாராலும் இந்தக் கொடுமையை ஏற்க முடியாது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்துவது ஜனநாயக வழியிலான நெறிமுறைதான். அரசாங்கத் தரப்பிலோ, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்திருக்கிறார்கள் போலீசார். அடுத்தகட்ட விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் போராடினார்கள். மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடப்பதால் பா.ஜ.க. இந்தப் போராட்டத்தை விரைவுபடுத்தியது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையின் சில பகுதிகள் வீடியோ காட்சிகளாகவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சி. அதனால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
இந்த முறை அ.தி.மு.க. வேகமாக களமிறங்கியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அ.தி.மு.க. மகளிரணியினரும் மெயின் ரோட்டில் போராட்டம் நடத்தினர். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கேட்டு, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டது என்னவிதமான போராட்டம் என்பது அவரது கட்சியினருக்கே புரியவில்லை. இது எந்த வகையில், இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்பதை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அவர்தான் சொல்லவேண்டும். பா.ம.க.வின் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சென்று அனுமதி கோரினர்.
சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளை தன்னிச்சையாகவும், பிற மனுக்களின் அடிப்படையிலும் விசாரித்து வரும் நிலையில், பல கருத்துகளை வெளியிட்டுள்ளது. வழக்கின் குற்றவாளி ஆளுங்கட்சியான தி.மு.க.வின் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்களை முன்வைத்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு, “நீதிபதிகளான எங்களுடனும் பல நிகழ்வுகளில் பலர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு என்று சொல்லிவிட முடியுமா? இதனை ஓர் ஆதாரமாகக் கொள்ள முடியாது” என ஏற்கனவே தெளிவுபடுத்திய நிலையில், தற்போது மேலும் சில கருத்துகளையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பா.ம.க. தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, “பெண்கள் பாதுகாப்பில் உண்மையான அக்கறை கொள்ளாமல் , அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்படவேண்டும். இதனை அரசியலாக்கி வருவது வேதனை. இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வெறும் விளம்பரத்திற்காக இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்” என்று கண்டித்திருக்கிறது.
மேலும், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த நீதிமன்றத்தின் பார்வையும் குறிப்பிடத்தக்கது. “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் பொறுப்புணர்வு இன்றி கடந்த 10 நாட்களாக விவாதம் செய்து வருகிறார்கள்” என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆளுங்கட்சியினருடன் இருக்கும் புகைப்படம், முதல் தகவல் அறிக்கை கசிந்ததன் பின்னணி, சம்பவத்தின் போது ‘சார்’ என்று யாரைக் குறிப்பிட்டார்கள் இவற்றை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசியல் போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இதற்கான விளக்கத்தை அரசுத் தரப்பும், எதிர்க்கட்சிகளும் மாறி மாறி வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
குஜராத்தில் பில்கிஸ்பானு தொடர்பான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை பா.ஜ.க. அரசு விடுவித்தது முதல், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாதது வரை நாம் உற்றுக் கவனித்தால், பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்பதுடன், இதுபோன்ற வழக்குகளில் உரிய நியாயத்தை நீதியைப் பெறுவதே பெரும் போராட்டமாக உள்ளது என்பதுதான் உண்மை.
அதனால்தான் சென்னை பல்கலை மாணவி விவகாரம் தொடர்பான வழக்கில், “போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்துக் கூறுங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று’ என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.