
அரசாங்கமே நேரடியாக மது விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் உண்டு. மதுபானங்களை கொள்முதல் செய்வதற்காக டாஸ்மாக் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட மதுபானங்களை தனியாருக்கு லைசென்ஸ் கொடுத்த கடைகள் மூலம் விற்பனை செய்யும் முறை இருந்து வந்தது. இந்த உரிமத்திற்கான ஏலத்தில் தனியார் முதலாளிகள்-ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளுடன் சிண்டிகேட் (கூட்டணி) அமைத்துக்கொண்டு ஏலத் தொகையை குறைத்துக் கேட்டு வந்த நிலையில், டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்து அரசாங்கமே நேரடியாக மது பாட்டில்களை விற்பனை செய்யும் முறை ஜெயலலிதா ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. தற்போது வரை எல்லா ஆட்சிக்காலங்களிலும் இதுவே தொடர்கிறது.
கொள்முதல் செய்வதும் டாஸ்மாக், விற்பனை செய்வதும் டாஸ்மாக் என்பதால் ஆட்சி அதிகாரத்திற்கு நெருக்கமானவர்கள் இரண்டு வகையிலும் அதிகாரம் செலுத்தும் நிலைமையும் தொடர்கிறது. மதுபான உற்பத்தியில் அரசியல்வாதிகள் ஈடுபடுகிறார்கள். மதுபானம் விற்பனை செய்யும் சில்லறைக் கடைகள் தொடர்பான பார்களிலும் அரசியல்வாதிகள் ஈடுபடுகிறார்கள். மேலும், மதுபான பாட்டிலின் விலையைவிட கூடுதல் விலை வைப்பது, விற்பனை நேரத்திற்கும் முன்பும் பின்பும் வரம்புமீறி சரக்கு விற்பனை செய்வது, போலி மதுபான விற்பனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில்தான், டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டின் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகியுள்ளது என்று குற்றம்சாட்டி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கட்சியின் முக்கிய தலைவர்களான ஹெச்.ராஜா, தமிழிசை, வானதி உள்ளிட்டவர்களும் கடந்த 17ந் தேதியன்று டாஸ்மாக் கடை முற்றுகை ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தி.மு.க ஆட்சியில் டாஸ்மாக் மூலம் ஊழல் நடைபெறுகிறது என்பதுதான் அமலாக்கத்துறை ரெய்டு அடிப்படையில் பா.ஜ.க. வைக்கும் குற்றச்சாட்டு. அமலாக்கத்துறை 41 எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) அடிப்படையில் இந்த ரெய்டை நடத்தியுள்ளது.
41 எஃப்.ஐ.ஆர். என்பது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டது. இதில் 34 எஃப்.ஐ.ஆர்.கள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தின் தொடர்புடையவை. அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தது மட்டுமின்றி, அந்த ஆட்சியைக் காப்பாற்றியதும் பா.ஜ.க.தான் என்பது நாடறியும். எனவே, தங்கள் தயவில் நடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளைக் கண்டித்துதான் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இவங்களே பாம் வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம் என்கிற பிரபல சினிமா வசனம் போல பா.ஜ.க.வின் போராட்டம் அவல நகைச்சுவையாகிவிட்டது.
அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெயரளவுக்கு போலீசார் கைது செய்தபோது, இது நாய் வண்டி இதில் ஏறமாட்டேன் என்று பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா வீம்பு பிடித்ததும், ஃப்ளைட்டுக்கு போகணும் சீக்கிரம் விடுங்க என்று அண்ணாமலை அவசரப்படுத்தியதும், தமிழிசையுடன் வந்தவர் நடத்திய மயக்க நாடகமும், தனியாக அரெஸ்ட் ஆகத் தயங்கி, டீம் வரட்டும் என்ற வானதியின் செயல்பாடும் பா.ஜ.க.வின் டாஸ்மாக் அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் மதுக்கடைகள் பளபளப்பாக அமைந்திருக்கின்றன. உத்தரபிரதேசம்தான் இந்தியாவில் ஆண்டுதோறும் மது விற்பனையில் அதிக பணப்புழக்கம் உள்ள மாநிலம். கோவா உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் மதுவிற்பனை வருவாய் என்பது அரசாங்க கஜானாவிற்கு வலு சேர்த்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் மட்டும், தேசத்தந்தை காந்தியின் மண் என்பதால் அங்கே பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே மதுவிலக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
சட்டப்படி மதுவிலக்கு என்று சொல்லப்பட்டாலும் குஜராத்திலும் மதுவுக்குப் பஞ்சமில்லை என்பதை அண்மையில் அங்கே காரை ஏற்றி ஒரு பெண்ணின் உயிர்ப்பலிக்கு காரணமான இளைஞர் குடிபோதையுடன் கார் கதவைத் திறந்து இறங்கி, இந்துத்வா ஆதரவு முழக்கங்களை எழுப்பி தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது வீடியோவாக இணையதளமெங்கும் பரவிக் கிடக்கிறது. குஜராத்தில் மது விற்பனை டோர் டெலிவரி மூலம் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வே ஓட்டுக்கு பாக்கெட் மது விற்பனை செய்தது அம்பலமானது. எனவே, மதுவிலக்கு பற்றி பேசுவதும், மதுபான ஊழல் என்பதும் அரசியலாகவும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அச்சுறுத்தும் கருவியாகவும் பா.ஜ.க.வினரால் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டாஸ்மாக் கொள்முதல்-விற்பனை, பார் ஒதுக்கீடு எல்லாவற்றையும் முறைப்படுத்தவேண்டும். மக்களின் அதிருப்திக்குரிய சொல்லாக டாஸ்மாக் மாறியிருப்பதை ஆள்வோர் உணரவேண்டும்.
5cyfp0
de7dhc
d4u9t8
05whw0