
தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை நிறைவுற்று முன்னாள் அதிமுக முன்னாள் மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் உள்பட 9 பேர் குற்றவாளிகள் என்று இன்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், அருளானந்தம், சதீஷ், அருண்பால், அருண்குமார், பாபு, மணிவண்ணன் ஆகிய 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
8 பெண்களுக்கு இழப்பீடு:
ஐந்து ஆண்டுகளாக பொள்ளாச்சி சம்பவ வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி 9 பேரும் குற்றவாளி என்று சொல்லி அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.10 இலட்சம், ரூ.15 இலட்சம் என்று 85 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு வழங்குவதற்காக குற்றவாளிகள் 9 பேருக்கும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விபரம்:
முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை, சதீஷ், ஹரேன்பால் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, அருளானந்தம் , பாபு, அருண்குமாருக்கு தலா 1 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரிதான வழக்கு:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டில் இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.
இளம்பெண்கள், திருமணமான பெண்களிடம் பழகி ஆசைவார்த்தை சொல்லி அழைத்துச்சென்று பண்ணை வீட்டில் வைத்து மிரட்டி வீடியோ அடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்தது ஒரு கும்பல்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிந்து வந்து 12.2.2019இல் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலதாமதப்படுத்தி வந்தனர். 24.2.2019இல் மேலும் ஒரு பெண் புகாரளித்தார். அதையடுத்து 24ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டு சதி உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து புகார் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தன்னை தாக்கியதாக 26ஆம் தேதி அன்று புகாரளித்தார். இதையடுத்து மணி, பாபு, செந்தில்,ராஜகோபால் கைது செய்யப்பட்டனர். அப்போதைய அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமான ‘பார்’நாகராஜன் பெயரை மட்டும் போலீசார் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை.
4.3.2019இல் இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த பல சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று திருநாவுக்கரசு ஆடியோ வெளியிட்டார். இதையடுத்து திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை நக்கீரன் இதழ் கையில் எடுத்து தீவிரமாக விசாரித்தது. இதனால் நக்கீரன் இதழின் கோவை நிருபர் அருள்குமாரை 5.3.2019இல் பொள்ளாச்சி ஜெயராமன் மிரட்டினார்.
இந்த வழக்கில் வேறு யாரும் புகாரளிக்கக் கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார் அப்போது கோவை எஸ்பியாக இருந்த பாண்டியராஜன். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக நீதிபதி கிருபாகரன் மார்ச் 15ஆம் தேதி அன்று கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர்

ப்ளீஷ் அண்ணா அடிக்காதீங்க…
பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொண்டது அப்போதைய அதிமுக ஆட்சி. இந்த நிலையில் ‘’ப்ளீஷ்..அண்ணா.. அடிக்காதீங்க.. கழட்டிடுறேன்.. ‘’ என்று இளம்பெண் கதறும் வீடியோ வெளியாகி தமிழ்நாட்டை உலுக்கி எடுத்தது. அந்த வீடியோவை மார்ச் 11இல் நக்கீரன் வெளியிட்டது.
இளம்பெண்ணை பெல்ட்டால் அடித்து ஆடைகளை கழற்றச்சொல்கிறது அந்த கும்பல். அதை வீடியோவும் எடுக்கிறது அந்த கும்பல். அப்பெண் மறுக்கவும் மேலும் மேலும் பெல்ட்டால் அடிக்கவும், அப்பெண் அடி தாங்க முடியாமல் கதறும் அந்த வீடியோ வெளியானதும் வழக்கின் தீவிரம் அதிகரித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மார்ச் 12இல் மாற்றப்பட்டது.
ஒரே நாளில் 100 புகார்கள்
இளம்பெண்ணின் கதறல் ஆடியோ வெளியாகி பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான நிலையில் ‘பார்’நாகராஜன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
வழக்கு பரபரப்பாக சென்றதால் பலர் துணிந்து புகாரளித்தனர். மார்ச் 15ஆம் தேதி அன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தனர்.
இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று அப்போது திமுக தொடர் போராட்டங்களை நடத்தியது.
ஆப்பிள் போனில் ஆபாச வீடியோக்கள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியமான நபர் திருநாவுக்கரசுவை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்துகொண்டே, தனக்கும் அந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வீடியோ வெளியிட்டார். தீவிர தேடலில் 5.3 2019இல் போலீசார் திருநாவுக்கரசுவை கைது செய்தனர். அவரின் ஆப்பிள் போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன .
திருநாவுக்கரசுவின் ஆப்பிள் போனில் கைப்பற்றப் பட்ட ஆபாச வீடியோக்கள்தான் இந்த வழக்கின் ஆணிவேராக இருந்தது.
TN 41 attack boys
TN 41 attack boys என்கிற பெயரில் வாட்சப் குழுவைத் தொடங்கி அதில் அதில் பாலியல் துன்புறுத்தல் செய்து எடுக்கப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
முக்கிய ஆதாரம்:
பொள்ளாச்சி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னர் சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் குற்றவாளி சபரிராஜன் வீட்டில் சோதனை நடத்தினார். அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட லேப்டார் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்தது.
சபரிராஜன் லேப்டாப்பும், திருநாவுக்கரசுவின் செல்போனும் எலக்ட்ரானிக் எவிடன்ஸ் என்கிற அடிப்படையில் முக்கிய ஆதாரங்கள் ஆனது.
லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த நூற்றுக்கணக்கான வீடியோக்களில் ஒரே பெண்ணை பல முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்களும், விலை மாதர்களுடன் இருந்த வீடியோக்களும் இருந்தன.
ரகசிய குழுக்கள்:
25.4.2019இல் பொள்ளாச்சி சம்பவ வழக்கு சிபிசிஐடி வசம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ பல ரகசிய குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியது. கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் இருந்த 20 பெண்களை நேரில் சந்தித்து அந்த ரகசிய குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் அந்த வீடியோவில் இருந்த பல பெண்கள் விலை மாதர்கள் என்பது தெரியவந்தது.
சிபிஐ விசாரணைக்கு பின்னர் அருளானந்தம், ஹெரேன்பால், பைக் பாபு மூன்று பேரையும் கைது செய்தது சிபிஐ.
குற்றப்பத்திரிகை:
24.5.2019இல் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், மணிவண்ணன், வசந்தராஜன் ஆகிய 5 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 16.8.2021இல் அருண்குமார் கைது தொடர்பாக 3ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை, கூடுதல் குற்றப்பத்திரிகை என்று பொள்ளாச்சி வழக்கில் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பெண்களின் கதறல் வெளியே கேட்காதபடி சவுண்ட் ப்ரூஃப் அறை:
திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான மாக்கினாம்பட்டி சின்னப்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் சிபிஐ விசாரணை நடத்தியபோது பல முக்கிய ஆதாரங்கள் சிக்கின. அந்த வீட்டில்தான் பெண்களை அழைத்து வந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தது தெரியவந்தது.
திருநாவுக்கரசு பைனான்ஸ் தொழில் செய்து வந்ததால் அவர் அடிக்கடி பெண்களை அழைத்து வந்ததை கிராமத்தினர் யாரும் தட்டிக்கேட்காமல் இருந்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலின் போது பெண்களின் கதறல் சத்தம் வெளியே கேட்காதவாறு அந்த வீட்டில் சவுண்ட் ப்ருஃப் செய்யப்பட்டிருந்தது அதிரவைத்தது.
அந்த வீட்டில் ஏராளமான பயன்படுத்த ஆணுறைகளும், பயன்படுத்தப்படாத ஆணுகளும் மீட்கப்பட்டன.

சாட்சிகள்:
பொள்ளாச்சி சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இதில் 48 சாட்சிகளை சிபிஐ விசாரணை நடத்தியது.
7 பெண்கள் சாட்சியம்:
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்ட 8 பெண்களை சிபிஐ அடையாளம் கண்டனர். அதில் 7 பெண்கள் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
8 பெண்களில் 7 பெண்கள் துணிச்சலாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஜாமீன் மறுப்பு ஏன்?
மிகவும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் அளித்தால் அவர்கள் வெளியே சென்று சாட்சிகளை மிரட்டி சாட்சியங்களை கலைத்துவிடுவார்கள் என்பதால் நீதிமன்றம் 9 பேருக்கும் ஜாமீன் வழங்காமல் இருந்தது. அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ வைத்த வாதத்தை ஏற்று இன்று 13.5.2025 அன்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். கடந்த 5 ஆண்டுகளாக இவர்தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். அதனால்தான் பணியிட மாறுதல் அளித்தும், அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்படாமல் இருந்தது.

மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதியாகும்:
சாகும்வரை 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதியாகும் என்கிறது சிபிஐ தரப்பு.
’’இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபணம் ஆனது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அச்சமின்றி சாட்சியம் அளித்தனர். குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டது.
வழக்கின் தன்மை அடிப்படையில் சிபிஐ வைத்த வாதங்களை ஏற்று நியாயமான தீர்ப்பினை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.
மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதியாகும்’’ என்கிறார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன்.