தவறான தகவலை பரப்பாதீர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாசடைந்த நிலையில் உள்ள ஆறுகள் இந்தியாவில் 311 உள்ளது என்றும், அதில் பிரியாரிட்டி -1ல் 4 ஆறுகள் உள்ளன என்றும், அந்த 4 ஆறுகளும் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை.
அதாவது, மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியக்குழு, இந்தியாவில் மாசடைந்த நிலையில் உள்ள 311 ஆறுகளில் தமிழ்நாட்டில் நடத்திய ஆய்வில், காவேரி, பாலாறு, பவானி, வசிஷ்டா, திருமணிமுத்தாறு, தாமிரபரணி, சர்பங்கா உள்ளிட்ட 7 ஆறுகளில் ஆய்வு நடத்தியது என்றும், இதில் 4 ஆறுகள் மாசடைந்த நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ளது என்று கூறினார்.
உண்மை என்னவென்றால், இந்தியாவில் மாசடைந்த ஆறுகளின் பட்டியலில் பிரியாரிட்டி -1ல் 46 ஆறுகள் உள்ளன. இந்த 46 ஆறுகளில் குஜராத் -6, உத்தரபிரதேசம் -6, மகாரஷ்டிரா -4, இமாச்சல பிரதேசம் -4, தமிழ்நாடு -4 ஆறுகள் உள்ளன. மாசுபட்ட நதி நீரின் தரத்தை மீட்டெடுப்பதற்கான 2022 அறிக்கையில் இவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமராவதி, பவானி, அடையாறு, காவேரி, பாலாறு, கூவம், சரபங்கா, வகிஷ்டா, திருமணிமுத்தாறு, தாமிரபரணி என்று 10 ஆறுகளில் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியக்குழு ஆய்வு நடத்தி, கூவம் ஆறு அதிகம் மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அடையாறு, திருமணிமுத்தாறு, வசிஷ்டா ஆறுகளும் அதிகம் மாசடைந்த ஆறுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்று கூறியிருக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, பாஜக ஆளும் மாநிலங்களை காப்பாற்றும் நோக்கில் இந்த உண்மையை மறைத்து, பிரியாரிட்டி -1ல் 4 ஆறுகள் மட்டுமே உள்ளன என்றும், அந்த 4 ஆறுகளும் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றும் பொய் தகவலை பரப்பி உள்ளார் அண்ணாமலை.
இதை அறிந்த தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு, ‘’தவறான தகவலை பரப்பாதீர்’’ என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.