தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு வீடு வாடகைக்கு விட்டு, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவர்கள் இணங்கவில்லை என்றால் வீட்டை காலி செய்யச்சொல்லி வேறு எங்கும் வீடு கிடைக்காதபடி மிரட்டல் விடுத்து வந்த அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் பொன்னம்பலத்தை கட்சியை விட்டு நீக்கி உள்ளார் பழனிசாமி.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் வசித்து வந்தவர் பொன்னம்பலம் (வயது 60). இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
பொன்னம்பலத்தின் வீட்டில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் பெண்கள் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்களுக்கு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
இதனால் வீட்டை விட்டு காலி செய்து வேறு இடத்திற்கு அந்தப் பெண்கள் சென்றிருக்கிறார்கள். அப்போதும் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அப்பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடப்ப கட்டையால் அடித்து, அவரை விரட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணயில் அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என்று தெரிய வந்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
படப்பை பகுதியில் அதிமுக நிர்வாகி தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்களை மிரட்டி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும் பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி தொடப்பத்தால் அடித்து விரட்டியதும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொன்னம்பலத்தை கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.