
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ‘திரைப்படப்பிரிவு’ ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தவர் சேரா எனும் சேரலாதன். இந்த திரைப்படப்பிரிவில் இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், சீமான் உள்ளிட்டோர் சென்று பயிற்சி அளித்தனர்.
ஈழத்தமிழர்களின் நிலையை உருவாக்கும் வகையில் எடுக்கப்பட்ட ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் சந்தோஷ். ஒளிப்பதிவுக்காக பொறுப்புகளை ஏற்றிருந்தவர் அமரதாஸ்.
சீமான் வன்னிக்கு சென்றது குறித்தும், அங்கே என்ன நடந்தது என்பது குறித்து இருவரும் தற்போது பேட்டி அளித்து அதிரவைக்கின்றனர். பெரியாரை சீமான் அவதூறாக பேசுவதால் சீமானை அம்பலப்படுத்துகிறோம் என்கிறார்கள்.
எல்லாளன் படத்தின் இயக்கத்தில் தன் பங்கு இருப்பதாகச் சீமான் சொல்லி இருக்கும் நிலையில் அதை மறுக்கிறார் அமரதாஸ்.

’’விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை’’என்கிறார் அமரதாஸ்.
வன்னியில் ஒரு மாதத்திற்கு மேல் தான் இருந்ததாக சீமான் சொல்வதும் பொய் என்கிறார் அமரதாஸ், அது குறித்து அவர், ‘’இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார்’’ என்கிறார்.

வன்னி சென்றிருந்த போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தனக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டது .கடாபி ஆயுதப்பயிற்சி அளித்தார் என்று சொல்லி இருந்தார் சீமான். அதையும் மறுத்துள்ளார் அமரதாஸ். எல்லாளன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வைத்துக்கொண்டு புலிகள் இயக்கத்தில் அளித்த ஆயுதப்பயிற்சி என்று சீமான் சொல்வதாக சொல்லும் அமரதாஸ், ’’வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவு செய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது.
‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த படங்களை நான் உருவாக்கியிருந்தேன்’’ என்கிறார்.
படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலானார். ஆயுதங்களோடு தான் இருப்பதுபோல படங்களை எடுக்குமாறு வேண்டிக்கொண்டார். ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து படங்களை உருவாக்கினேன். அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான் என்கிறார் அமரதாஸ்.

பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை என்று சொல்கிறார் அமரதாஸ். ஆனால், ‘’வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான்’’ என்று குற்றம் சாட்டுகிறார்.
நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லி அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லும் அமரதாஸ், தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும் என்கிறார்.
பிரபாகரனை கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை என்று சொல்லும் அமரதாச், தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது என்கிறார்.