
கார்த்திக் மனோகரன், அமரதாசைத் தொடர்ந்து பிரபாகரன் – சீமான் சந்திப்பு குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் நேரடி சாட்சியான சந்தோஷ்.
பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும் சீமானை சந்திக்கவில்லை. சீமானை மட்டுமல்ல பிரபாகரன் குடும்பத்தினர் யாரையும் சந்திக்க மாட்டார்கள் என்கிறார் சந்தோஷ்.
வன்னியில் 7 மாதங்கள் தங்கி இருந்து ‘எல்லாளன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ். அவர், ’பிரபாகரனுடன் 2 மாதங்கள் வன்னியில் இருந்தேன். அப்போது இட்லிக்கு ஆமைக்கறி கொடுத்தார் பிரபாகரன். அண்ணியார் (பிரபாகரனின் மனைவி) தனக்கு பாசத்துடன் கூட்டி விட்டார்’ என்று சீமான் சொல்வதை மறுத்துள்ளார்.
தன்னை பார்க்க வேண்டுமென்று பிரபாகரன் அழைத்தார் என்பதையும் சந்தோஷ் மறுத்துள்ளார்.
’’ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போதிலும் கூட விருந்தினருக்கு விருந்தோம்பலில் ஒரு குறையும் வைத்ததில்லை விடுதலைப்புலிகள். அந்த வகையில் சீமானுக்கு உடும்புக்கறிதான் பரிமாறப்பட்டது. ஆனால் ஆமைக்கறி அவர் விரும்பி கேட்டார். அந்த நேரத்தில் ஆமைக்கறி சமைக்கப்படவில்லை. எல்லா காலத்திலும் ஆமைக்கறி கிடைக்காது. சீமான் சென்ற நேரத்தில் அவருக்கு உடும்புக்கறிதான் பரிமாறப்பட்டது’’ என்கிறார் சந்தோஷ்.

சீமானைப்பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும் அவரது பேச்சின் மீது ஈர்க்கப்பட்டுத்தான் அவரை சந்திக்க பிரபாகரன் சந்தித்ததாக சொல்கிறார் சந்தோஷ். ’’எல்லாளன் படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்தபோது, விடுதலைப்புலிகளின் திரைப்பிரிவு பொறுப்பாளராக இருந்த சேரலாதன் சீமானை அழைத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில் வன்னி வந்த சீமான் சில தினங்கள் மட்டுமே அங்கே இருந்தார். பிரபாகரனை பார்க்க வேண்டும் என்று சீமான் சொன்னதால், பிரபாகரனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்மதம் சொன்ன பிறகு சீமானை அழைத்துச் சென்றார்கள். நானும் உடன் சென்றேன்.
எட்டு நிமிடங்கள்தான் சீமானை சந்தித்தார் பிரபாகரன். அதற்குள் வேறு விசயமாக வேறு சிலர் வந்துவிட்டதால் அந்த சந்திப்பு முடிந்தது. அந்த சந்திப்பின் போது எடுத்த வீடியோ என்னிடம் உள்ளது. இதைப்பெற எத்தனையோ முயற்சிகள் எடுத்தார் சீமான். நான் கொடுக்கவே இல்லை. இனியும் எப்போதும் கொடுக்கப்போவதில்லை.

வன்னியில் இருந்து சீமான் விமானம் மூலமாக வந்ததால் அவரிடம் போட்டோ இருந்தால், வன்னியில் எல்லாளன் படம் எடுத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றோருக்கு ஆபத்து நேரும் என்று அந்த போட்டோ/வீடியோவை கொடுத்தனுப்ப வேண்டாம் என்று சேரலாதன் தடுத்துவிட்டார். அதன் பின்னரும் சீமான் அந்த போட்டோவை வைத்து அரசியல் செய்வார் என்று சேரலாதன் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்று பகிரப்படும் போட்டோக்கள் உண்மை இல்லை’’ என்கிறார் சந்தோஷ்.
சீமான் மீது ஏதோ அவநம்பிக்கை ஏற்பட்டதால்தான் நடேசன், சேரலாதன் உள்ளிட்டோர் போட்டோவை அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள் என்று சொல்லும் சந்தோஷ், அதற்கேற்றார் போல்தான் அநாகரீகமாக சீமான் நடந்துகொண்டார் என்கிறார்.
’’புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் சேரலாதன் ஸ்கைப்பில் பேசுவார். அப்படித்தான் சீமானுக்கும் ஸ்கைப் வசதி செய்து கொடுத்திருந்தார்கள். சேரலாதன் சீமானுடன் பேச வேண்டும் என்று சொன்னபோது சீமானிடம் சொல்லச்சென்றேன். அப்போது அவருடன் நடிகை விஜயலட்சுமி இருந்தார். விசயத்தைச் சொன்னதும் சரி கனெக்ட் பண்ணுங்க என்று சொன்னார் சீமான். நான் நடிகையை பார்த்து தயங்கி நின்றதும், நம்ம புள்ளதான் கனெக்ட் பண்ணுங்க என்று சொன்னார். எனக்கு அது அருவறுப்பாக இருந்தது. அங்கே சண்டை முனையில் இருந்து அவர் பேசும்போது இவர் இப்படி நடந்துகொண்டதை பொறுக்க முடியாமல் சேரலாதனிடம் சொன்னேன். அவர் சீமானை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு இனிமேல் சீமானிடம் பேசமாட்டேன் என்று சொன்னார். அதுதான் சீமானிடம் சேரலாதன் கடைசியாக பேசியது’’என்கிறார்.

’’சீமானிடம் சொல்லு… அவரை நம்பித்தான் விட்டுவிட்டுப் போகிறோம்’’ என்று ஈழ இறுதிப்போரில் நின்று தமிழீழ விடுதலைப்புலிகள் கடற்படை தளபதி சூசை சொன்னதாகச் சீமான் சொல்லி வருவதையும் மறுக்கிறார் சந்தோஷ்.
’’போரில் சேரலாதன் இறந்த பின்னர் சூசை என்னிடம் தொடர்பில் இருந்தார். இலங்கை போர் முடிவுக்கு முன்பு கடைசியாக சூசை என்னிடம் பேசினார். அந்த கால் பேசிய சிறிது நேரத்திலேயே சூசை போரில் இறந்து விட்டார். ஈழப்போரின் கடைசிகாலத்தில் சீமான் எழுச்சியுடன் பேசி வந்ததால் சீமான் பேரையும் உச்சரித்தார் சூசை. சீமான் பெயரை மட்டும் அவர் சொல்லவில்லை. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் பெயரை எல்லாம் அந்த ஆடியோவில் சொல்லி இருந்தார்.
எல்லோரிடமும் அந்த ஆடியோவை போட்டுக்காட்டினேன். யாரும் அந்த ஆடியோவைக் கொடு என்று கேட்கவில்லை. சீமானும் அந்த ஆடியோவை கேட்டுவிட்டு அழுதார். அழுது முடித்த உடனேயே அந்த ஆடியோ கேட்டார். நான் தர மறுத்தேன். பிடிவாதமாக என்னிடம் கெஞ்சி வாங்கிக்கொண்டார். அதில் சூசை சொன்ன மற்ற தலைவர்களின் பெயர்களை எல்லாம் நீக்கிவிட்டு, தன்னிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு சென்றதாக பரப்பிக்கொண்டிருக்கிறார் சீமான்’’ என்கிறார்.
சீமான் இன்று பேசி வருவதெல்லாம் தடா சந்திரசேகரன், கொளத்தூர் மணி, ஓவியர் புகழேந்தி, நெடுமாறன், வைகோ ஆகியோருக்கு நடந்தது. அதை எல்லாம் தனக்கு நடந்ததாக சொல்லி ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைத்திருக்கிறார் சீமான் என்றும் சொல்லி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார் சந்தோஷ்.
பிரபாகரன் – சீமான் இணைந்திருக்கும் போட்டோவை செங்கோட்டையன் கேட்டுக்கொண்டதால் எடிட் செய்து கொடுத்ததாக சங்ககிரி ராஜ்குமார் சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த போட்டோவை தான் தான் சீமானிடம் கொடுத்தாகவும் சந்தோஷ் சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.